ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து மீண்டும் கொண்டுவரப்படாது - அமித்ஷா திட்டவட்டம்
|ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து மீண்டும் கொண்டுவரப்படாது என்று அமித்ஷா தெரிவித்துள்ளார்.
ராய்ப்பூர்,
ஜம்மு-காஷ்மீரில் 3 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்ட தேர்தல் செப்டம்பர் 18ம் தேதியும், 2ம் கட்ட தேர்தல் செப்டம்பர் 25ம் தேதியும், 3ம் கட்ட தேர்தல் அக்டோபர் 1ம் தேதியும் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தல் நெருங்கி வரும் அரசியல் கட்சியினர் பிரசாரத்தில் இறங்கியுள்ளனர்.
குறிப்பாக, ஜம்மு-காஷ்மீரின் பிரதான கட்சிகளான மக்கள் ஜனநாயக கட்சி மற்றும் தேசிய மாநாட்டு கட்சி தேர்தலில் வெற்றிபெற்றால் ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டத்தை மீண்டும் கொண்டுவருவோம் என்று தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், சத்தீஷ்காரில் நடந்த நக்சலைட்டுகள் ஒழிப்பு தொடர்பான உயர் அதிகாரிகள் மட்டத்திலான ஆலோசனை கூட்டத்திற்குப்பின் உள்துறை மந்திரி அமித்ஷா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டம் 370ஐ மீண்டும் கொண்டுவருவதாக மக்கள் ஜனநாயக கட்சி மற்றும் தேசிய மாநாட்டு கட்சி தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்திருப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதில் அளித்த அமித் ஷா, சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டம் 370க்கு ஜம்மு-காஷ்மீருக்கு இப்போதும் இனி எப்போதும் இடமில்லை. ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து மீண்டும் கொண்டுவரப்படாது' என்றார்.