சீன உளவு கப்பல் விவகாரம்: இலங்கையின் நிலையை இந்தியா புரிந்து கொள்ளும்- சுற்றுலாத்துறை மந்திரி ஹரின் பெர்னாண்டோ
|இந்தியா வந்துள்ள இலங்கை சுற்றுலாத்துறை மந்திரி ஹரின் பெர்னாண்டோ, இலங்கையின் நிலையை இந்தியா புரிந்து கொள்ளும் என்று கூறினார்.
சீனாவின் உளவு கப்பலான 'யுவான் வாங் 5', இலங்கையின் அம்பன்தோட்டா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டு இருக்கிறது. இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி சீன கப்பலுக்கு இலங்கை அரசு அனுமதி அளித்திருக்கும் விவகாரம் மத்திய அரசுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
ஆனால் இந்த விவகாரத்தில் இரு நாடுகளுக்கு இடையே ராஜதந்திர பிரச்சினை ஏற்படாது என இலங்கை கூறியுள்ளது. இந்தியா வந்துள்ள அந்த நாட்டு சுற்றுலாத்துறை மந்திரி ஹரின் பெர்னாண்டோ இது தொடர்பாக நம்பிக்கை தெரிவித்து உள்ளார். ஆமதாபாத்தில் இதுகுறித்து அவர் கூறுகையில், 'இலங்கை ஒரு சிறிய நாடு, ஒவ்வொரு நாட்டுடனும் எங்களுக்கு நல்ல உறவு இருக்கிறது. எங்கள் நிலைமையை இந்தியா நிச்சயம் புரிந்து கொள்ளும். இந்தியாவுடன் எங்களுக்கு சிறந்த தூதரக உறவுகள் உள்ளன' என தெரிவித்தார்.
இலங்கையில் சீனர்களின் முதலீடுகள் அதிகம் என்பதுடன், கடந்த காலங்களில் எங்கள் தேவைகள் குறித்தும் அவர்கள் நன்கு புரிந்து கொண்டுள்ளனர் என்றும் கூறிய ஹரின் பெர்னாண்டோ, எனவே இது ஒரு பெரிய ராஜதந்திர பிரச்சினை இல்லை என்று நம்புவதாகவும் கூறினார்