< Back
தேசிய செய்திகள்
சிவமொக்காவில் கைதான பயங்கரவாதிகளின் வீடுகளில் இருந்து வெடிப்பொருட்கள் பறிமுதல்
தேசிய செய்திகள்

சிவமொக்காவில் கைதான பயங்கரவாதிகளின் வீடுகளில் இருந்து வெடிப்பொருட்கள் பறிமுதல்

தினத்தந்தி
|
24 Sept 2022 12:45 AM IST

சிவமொக்காவில் கைதான பயங்கரவாதிகளின் வீடுகளில் இருந்து வெடிப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு லட்சுமி பிரசாத் தெரிவித்துள்ளார்.

சிவமொக்கா;

2 பயங்கரவாதிகள் கைது

சிவமொக்காவில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக மாஷ் முனீர் அகமது, சையத் யாசின் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள மற்றொரு பயங்கரவாதி ஷாரீக்கை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். கைதான 2 பயங்கரவாதிகளிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். நேற்று முன்தினம் பயங்கரவாதிகளுக்கு சொந்தமான 11 இடங்களில் போலீசார் சோதனை நடத்தினர்.

மேலும், அவர்கள் வெடிகுண்டு பயிற்சி பெற்ற இடத்துக்கும் 2 பேரையும் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இந்த நிலையில் பயங்கரவாதிகளுக்கு சொந்தமான இடங்களில் நடந்த சோதனை குறித்து நேற்று சிவமொக்கா போலீஸ் சூப்பிரண்டு லட்சுமி பிரசாத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வெடிப்பொருட்கள் பறிமுதல்

சிவமொக்காவில் கடந்த மாதம் (ஆகஸ்டு) 15-ந்தேதி சுதந்திர தினத்தன்று நடந்த வன்முறையில் கைதானவர்கள் கொடுத்த தகவலின்பேரில் சிவமொக்காவில் பதுங்கி இருந்த 2 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் சிவமொக்காவை சேர்ந்த சையத் யாசின், மங்களூருவை சேர்ந்த மாஷ் முனீர் அகமது. மற்றொரு பயங்கரவாதியான ஷாரீக் தலைமறைவாக உள்ளார். அவரை தேடி வருகிறோம். அவர் தான் ஏ1 குற்றவாளி ஆவார்.

இவர்கள் நகரில் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் செயல்களிலும், மக்களை அச்சுறுத்தும் செயல்களிலும் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இவர்களுக்கு சொந்தமான 11 இடங்களில் போலீசார் சோதனை நடத்தி இருந்தனர். அங்கு இருந்து வெடிப்பொருட்கள், 14 செல்போன்கள், 2 மடிக்கணினி, 1 பென்டிரைவ், ஒரு டாங்கல், வெடிப்பொருட்கள் தயாரிக்க பயன்படுத்தப்படும் பொருட்கள், வயர், பேட்டரிகள், தீப்பெட்டிகள், மின் விளக்குகள், இந்திய தேசிய கொடி, ஒரு கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்