தனியார் நிறுவனத்தில் ரூ.2¾ லட்சம் கையாடல்; காதலன், சகோதரிகளுடன் பெண் ஊழியர் கைது
|ஆன்லைன் பணப்பரிமாற்றம் மூலம் தனியார் நிறுவனத்தில் ரூ.2¾ லட்சத்தை கையாடல் செய்த பெண் ஊழியர், காதலன், சகோதரிகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெங்களூரு:
ஆன்லைன் பணப்பரிமாற்றம் மூலம் தனியார் நிறுவனத்தில் ரூ.2¾ லட்சத்தை கையாடல் செய்த பெண் ஊழியர், காதலன், சகோதரிகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரூ.2¾ லட்சம் மாயம்
பெங்களூரு வித்யாரண்யபுரா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஒரு தனியார் நிறுவனம் உள்ளது. அந்த நிறுவனத்தின் உரிமையாளராக வெங்கடேஷ் ரெட்டி உள்ளார். அந்த நிறுவனத்தில் வரவேற்பாளராக ரிது என்ற இளம்பெண் வேலை செய்து வந்தார். இதுதவிர நிறுவன போன் பே, கூகுள் பே மூலமாக நடைபெறும் பணப்பரிமாற்றத்தையும் ரிது கவனித்து வந்தார்.
இந்த நிலையில், நிறுவனத்திற்கு சொந்தமான வங்கி கணக்கில் ரூ.2¾ லட்சம் மாயமாகி இருந்தது. இதுபற்றி ரிதுவிடம், உரிமையாளர் வெங்கடேஷ் ரெட்டி கேட்டுள்ளார். ஆனால் அவர் சரியாக பதில் அளிக்கவில்லை. இதையடுத்து, வித்யாரண்யபுரா போலீசில் ரிது மீது வெங்கடேஷ் ரெட்டி புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
4 பேர் கைது
இந்த நிலையில், ரூ.2¾ லட்சம் மோசடி வழக்கில் நிறுவன வரவேற்பாளர் ரிது, அவரது சகோதரிகள் மற்றும் காதலன் ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். அதாவது போன் பே, கூகுள் பே உள்ளிட்ட பணப்பரிமாற்றத்தை கவனித்து வந்த ரிது, அதன்மூலமாக தனது சகோதரிகள் கயானா, ஜானு மற்றும் காதலன் குசாலப்பாவின் வங்கி கணக்குகளுக்கு ரூ.2¾ லட்சத்தையும் அனுப்பி வைத்து கையாடல் செய்தது தெரிந்தது.
அவர்களிடம் இருந்து பணம், செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைதான 4 பேர் மீதும் வித்யாரண்யபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.