< Back
தேசிய செய்திகள்
பாலியல் வழக்கில் கைதான சித்ரதுர்கா மடாதிபதிக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு
தேசிய செய்திகள்

பாலியல் வழக்கில் கைதான சித்ரதுர்கா மடாதிபதிக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு

தினத்தந்தி
|
14 Sept 2022 10:01 PM IST

பாலியல் வழக்கில் கைதான சித்ரதுர்கா மடாதிபதிக்கு நீதிமன்ற காவலை நீட்டித்து சித்ரதுர்கா கோர்ட்டு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

சிக்கமகளூரு:

பாலியல் வழக்கில் கைதான சித்ரதுர்கா மடாதிபதிக்கு நீதிமன்ற காவலை நீட்டித்து சித்ரதுர்கா கோர்ட்டு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரு

சித்ரதுர்காவில் முருக மடம் அமைந்துள்ளது. இந்த மடத்தின் மடாதிபதியாக சிவமூர்த்தி முருகா சரணரு(வயது 64) இருந்து வந்தார். இந்த நிலையில் இந்த மடத்தின் கீழ் செயல்பட்டு வரும் பள்ளியில் தங்கி படிக்கும் மாணவிகளுக்கு மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரு மீது 2 மாணவிகள் பாலியல் புகார் கொடுத்தனர். அதாவது மைசூருவில் உள்ள மடத்திற்கு சொந்தமான பள்ளி விடுதியில் தங்கி படித்து வரும் மாணவிகள் மைசூரு போலீசாரிடம் மடாதிபதி மீது பாலியல் புகார் கொடுத்திருந்தனர். பின்னர் அந்த புகார் சித்ரதுர்கா போலீசாருக்கு மாற்றப்பட்டது. அதன்பேரில் சித்ரதுர்கா போலீசார் மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணருவை போக்சோவில் கைது செய்தனர்.

நீதிமன்ற காவல்

பின்னர் அவர் நீதிமன்ற காவலில் சித்ரதுர்கா மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே அவர் ஜாமீன் கோரி சித்ரதுர்கா கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீதான விசாரணை நேற்று சித்ரதுர்கா போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடந்தது. அப்போது மடாதிபதியும், கோர்ட்டில் குவிந்திருந்த அவரது ஆதரவாளர்களுக்கு எப்படியும் ஜாமீன் கிடைத்துவிடும் என்று நினைத்திருந்தனர். ஆனால் நீதிபதி, மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணருவுக்கு மேலும் 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து உத்தரவிட்டார்.

இதையடுத்து வருகிற 27-ந் தேதி வரை மடாதிபதிக்கு நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டது. அதையடுத்து போலீசார் மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணருவை மீண்டும் சித்ரதுர்கா மாவட்ட சிறையில் அடைத்தனர்.

நாளை விசாரணை

மடாதிபதி வருகையையொட்டி கோர்ட்டில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இதற்கிடையே சித்ரதுர்கா கோர்ட்டில் மடாதிபதி சார்பில் ஜாமீன் கோரி மற்றொரு மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அந்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி அதன் மீதான விசாரணையை 16-ந் தேதிக்கு(நாளை) ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்