மேற்கு வங்காள மாநிலத்தில் பரபரப்பு: மத்திய மந்திரி ஜான் பர்லாவுக்கு பிடிவாரண்டு
|மேற்கு வங்காள மாநிலத்தைச் சேர்ந்த மத்திய மந்திரி ஜான் பர்லாவை கைது செய்ய பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டிருப்பது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொல்கத்தா,
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. கூட்டணி அரசில், சிறுபான்மையினர் நலன் துறை ராஜாங்க மந்திரி பதவி வகிப்பவர், ஜான் பர்லா (வயது 47).
மேற்கு வங்காள மாநிலத்தைச் சேர்ந்த இவர் தேயிலைத்தோட்ட தொழிலாளியாக இருந்து அரசியலுக்கு வந்தவர். கடந்த நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் இவர் அலிப்பூர்துவார்ஸ் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஆவார்.
வழக்கும், வாரண்டும்
கடந்த தேர்தலின்போது, போலீஸ் அனுமதி பெறாமல் மோட்டார் சைக்கிள் பேரணி நடத்தி, தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக இவர் மீது குற்றச்சாட்டு எழுந்து, பக்ஷர்ஹாட் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அது தொடர்பான வழக்கு கூச்பெஹார் மாவட்டத்தின் துபான்கஞ்ச் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.
இந்த வழக்கு விசாரணைக்கு கடந்த 15-ந் தேதி நேரில் ஆஜராகுமாறு கோர்ட்டு சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் அதன்படி கோர்ட்டில் ஆஜராகவில்லை.
இதையடுத்து அவரை கைது செய்யுமாறு கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்துள்ளது. இது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.