< Back
தேசிய செய்திகள்
தொழில் அதிபரிடம் ரூ.1.16 கோடி மோசடி; போலி ராணுவ பெண் அதிகாரி கைது
தேசிய செய்திகள்

தொழில் அதிபரிடம் ரூ.1.16 கோடி மோசடி; போலி ராணுவ பெண் அதிகாரி கைது

தினத்தந்தி
|
15 March 2023 3:28 AM IST

ரூ.66 கோடிக்கு டெண்டர் கொடுப்பதாக கூறி தொழில்அதிபரிடம் ரூ.1.16 கோடி மோசடியில் ஈடுபட்ட போலி ராணுவ பெண் அதிகாரி உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெங்களூரு:

ரூ.66 கோடிக்கு டெண்டர் கொடுப்பதாக கூறி தொழில்அதிபரிடம் ரூ.1.16 கோடி மோசடியில் ஈடுபட்ட போலி ராணுவ பெண் அதிகாரி உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ரூ.66 கோடிக்கு டெண்டர்

பெங்களூருவில் வசித்து வருபவர் மோகன், தொழில்அதிபர். கடந்த ஆண்டு (2022) இவருக்கும், தர்ஷினா பரத்வாஜ் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அப்போது தன்னை ராணுவ அதிகாரி என்று தர்ஷினா கூறிக் கொண்டார். ராணுவ சீருடை அணிந்து கொண்டு இருந்ததுடன், அடையாள அட்டையும் வைத்திருந்தார். பையப்பனஹள்ளியில் உள்ள ராணுவத்துக்கு சொந்தமான இடத்தில் ரூ.66 கோடியில் கட்டுமான பணிகள் நடைபெற உள்ளதாகவும், இதற்கான டெண்டரை பெற்றுக் கொடுப்பதாகவும் மோகனிடம் தர்ஷினா கூறி இருந்தார்.

மேலும் டெண்டர் கொடுப்பதாக கூறி ரூ.1.16 கோடியையும் தர்ஷினா பெற்றுக் கொண்டார். ராணுவத்திற்கு சொந்தமான இடத்தில் கட்டுமான பணிகள் நடைபெற உள்ள பகுதியை வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்தும் மோகனிடம் தர்ஷினா வழங்கி இருந்தார். அதன்பிறகு, டெண்டர் பணிகளை மேற்கொள்ள ரூ.19 கோடியை விடுவிக்க ரூ.40 லட்சம் வழங்கும்படி தர்ஷினா கேட்டுள்ளார்.

போலி அதிகாரி கைது

இதனால் சந்தேகம் அடைந்த அவர், ராணுவ அலுவலகத்திற்கு சென்று ரூ.66 கோடியில் நடைபெற உள்ள வளர்ச்சி பணி, டெண்டர் குறித்து விசாரித்தார். அப்போது அதுபோன்று டெண்டர் விடவில்லை என்றும், அந்த அலுவலகத்தில் தர்ஷினா என்பவர் பணியாற்றவில்லை என்பதும் மோகனுக்கு தெரியவந்தது. இதுபற்றி உடனடியாக அவர், பையப்பனஹள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், ரூ.1.16 கோடி மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த போலி ராணுவ அதிகாரியான தர்ஷினா, ஜே.பி.நகரை சேர்ந்த தர்ஷன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். தர்ஷினாவின் கணவர் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்று விட்டார். தற்போது அவர் கணவரை விவாகரத்து செய்து தனியாக வசித்து வருகிறார்.

கர்ப்பிணி போல் நடித்து...

எளிதில் பணம் சம்பாதிக்கும் ஆசையில் ராணுவ அதிகாரி போல் நடித்து மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார். இதற்காக போலி அடையாள அட்டையும் அவர் தயாரித்து வைத்திருந்தார். பையப்பனஹள்ளி ராணுவ அலுவலகத்திற்கு சமீபத்தில் சீருடையுடன் சென்று, தான் ஒரு கர்ப்பிணி என்றும் உடல் சோர்வாக இருக்கிறது என்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாரிடம் கூறியுள்ளார். அவர்களும் அலுவலகத்திற்குள் சென்று ஓய்வெடுக்க அனுமதித்துள்ளனர்.

அந்த சந்தர்ப்பத்தில் அலுவலகத்தில் காலியாக இருந்த பகுதியை புகைப்படம், வீடியோ எடுத்து வைத்து கொண்ட அவர், அங்கு தான் ரூ.66 கோடியில் வளர்ச்சி பணிகள் நடைபெற இருப்பதாகவும், டெண்டர் தருவதாகவும் கூறி மோகனிடம் ரூ.1.16 கோடி பெற்று மோசடி செய்தது தெரியவந்தது. கைதானவர்களிடம் இருந்து பணம், போலி அடையாள அட்டை, சில ஆவணங்களை கைப்பற்றி தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்