< Back
தேசிய செய்திகள்
கர்நாடகத்தில் குரங்கு அம்மை நோயாளிகளுக்கு பெங்களூரு, மங்களூருவில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு; சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பேட்டி
தேசிய செய்திகள்

கர்நாடகத்தில் குரங்கு அம்மை நோயாளிகளுக்கு பெங்களூரு, மங்களூருவில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு; சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பேட்டி

தினத்தந்தி
|
2 Aug 2022 9:58 PM IST

கர்நாடகத்தில் குரங்கு அம்மை பாதிப்பு ஏற்படும் நோயாளிகளுக்கு பெங்களூரு, மங்களூருவில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கூறியுள்ளார்.

பெங்களூரு:

குரங்கு அம்மை

நாட்டில் குரங்கு அம்மை நோய் பரவி வருகிறது. கேரளா, டெல்லி ஆகிய மாநிலங்களில் அந்த நோய் பரவியுள்ளது. மேலும் குரங்கு அம்மை நோய் தாக்கிய ஒருவர் கேரளாவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து இந்த குரங்கு அம்மை நோய் பரவலை கட்டுப்படுத்த தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து கர்நாடக அரசின் சுகாதாரத்துறை, குரங்கு அம்மையை தடுப்பது குறித்து புதிய வழிகாட்டுதலை ஏற்கனவே வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் குரங்கு அம்மை நோய் பரவலை தடுப்பது தொடர்பாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் சுகாதாரத்துறையின் ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

6 பேருக்கு நோய் பாதிப்பு

குரங்கு அம்மை நோய் பரவலை தடுப்பது குறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் உலக சுகாதார நிறுவனம் அவசர சுகாதார நெருக்கடி நிலை என்று அறிவித்துள்ளது. இந்த நோய் 80 நாடுகளுக்கு பரவியுள்ளன. உலகம் முழுவதும் 20 ஆயிரம் பேருக்கு பரவியுள்ளது. இந்தியாவில் 6 பேருக்கு இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் கேரளாவில் 4 பேருக்கும், டெல்லியில் 2 பேருக்கும் பாதிப்பு உள்ளது. கர்நாடகத்தில் இதுவரை யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

கர்நாடகத்தில் 3 பேருக்கு குரங்கு அம்மை அறிகுறி இருப்பது தெரியவந்துள்ளது. அதில் 2 பேர் பெங்களூருவில் உள்ளனர். அந்த 2 பேருக்கும் பாதிப்பு இல்லை என்று பரிசோதனை முடிவு வந்துள்ளது. உத்தரகன்னடாவில் ஒருவர் உள்ளார். அவரது ரத்த மாதிரி பரிசோதனை ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் அறிக்கைக்காக காத்திருக்கிறோம். இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டவர்கள் 21 நாட்கள் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். காய்ச்சல் வரும். தோளில் அரிப்பு ஏற்படும். சிறிய கொப்பளங்கள் ஏற்படும்.

பயப்பட தேவை இல்லை

விமான நிலையத்தில் பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்படுகிறது. நோய் அறிகுறி உள்ளவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. நோயாளியுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவருக்கு மட்டுமே இது பரவும் தன்மையை கொண்டது. கொரோனா போல் இது வேகமாக பரவாது. கேரளாவின் எல்லை பகுதியில் கண்காணிப்பை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளோம்.

அதனால் குரங்கு அம்மையை கண்டு பொதுமக்கள் பயப்பட தேவை இல்லை. ஆனால் முன்எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். குரங்கு அம்மை நோய் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க பெங்களூரு இ.டி. ஆஸ்பத்திரி மற்றும் மங்களூருவில் வென்லாக் ஆஸ்பத்திரியில் சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு சுதாகர் கூறினார்.

மேலும் செய்திகள்