உள்நாட்டுப்போர் நடந்து வரும் சூடானில் இருந்து இதுவரை 2,000 இந்தியர்கள் மீட்பு - மத்திய அரசு தகவல்
|உள்நாட்டுப்போர் நடந்து வரும் சூடானில் இருந்து இதுவரை சுமார் 2,000 இந்தியர்கள் மீட்டு வெளியேற்றப்பட்டு உள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.
புதுடெல்லி,
ஆப்பிரிக்க நாடான சூடானில் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக ராணுவம் மற்றும் துணை ராணுவத்துக்கு இடையே உள்நாட்டுப்போர் மூண்டுள்ளது. தலைநகர் கார்தூம் உள்பட நாட்டின் பல பகுதிகளில் கடுமையான சண்டை நடக்கிறது.
இந்த தாக்குதலால் ஏற்பட்டுள்ள மோசமான சூழலில் இருந்து வெளிநாட்டினரை மீட்பதற்கு அந்தந்த நாடுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. இந்தியாவும் 'ஆபரேஷன் காவேரி' என்ற பெயரில் மீட்பு நடவடிக்கைகளை தொடங்கி உள்ளது.
இதற்காக இந்திய கடற்படை கப்பல்கள் ஐ.என்.எஸ். சுமேதா, ஐ.என்.எஸ். டெக், ஐ.என்.எஸ் தர்காஷ் மற்றும் விமானப்படையின் 2 சி-130ஜே ரக விமானங்கள் களத்தில் இறக்கப்பட்டு உள்ளன. இவற்றின் மூலம் இந்தியர்கள் விரைவாக மீட்கப்பட்டு வருகின்றனர்.
இந்தியா வந்தனர்
போர் சூழலில் சிக்கியுள்ள அவர்களை விரைவாக மீட்டு சூடான் துறைமுகத்துக்கு கொண்டு வந்து, அங்கிருந்து போர்க்கப்பல்கள் மற்றும் விமானப்படை விமானங்கள் மூலம் சவுதி அரேபியாவின் ஜெட்டாவுக்கு கொண்டு செல்லப்படுகின்றனர்.
பின்னர் அங்கிருந்து சிறப்பு விமானங்கள் மூலம் இந்தியா அழைத்து வரப்படுகின்றனர். இதில் 360 பேர் அடங்கிய முதல் குழுவினர் நேற்று முன்தினம் டெல்லி வந்தநிலையில், மேலும் 246 இந்தியர்களுடன் நேற்று ஒரு விமானம் மும்பை வந்தடைந்தது.
இந்த நிலையில் சூடானில் இருந்து இதுவரை 1,700 முதல் 2 ஆயிரம் வரையிலான இந்தியர்கள் மீட்டு வெளியேற்றப்பட்டு உள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.
இது தொடர்பாக வெளியுறவுத்துறை செயலாளர் வினய் குவாத்ரா செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
கொந்தளிப்பான சூழல்
சூடானில் சுமார் 3,500 இந்தியர்கள் மற்றும் சுமார் 1,000 இந்திய வம்சாவளியினர் வசித்து வருகின்றனர்.
அவர்களை பத்திரமாக மீட்டு வர கார்தூமில் உள்ள இந்திய தூதரகமும், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகமும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.
அங்கு தாக்குதல் தீவிரமாக நடைபெறுவதால் மிகவும் கொந்தளிப்பான சூழல் உள்ளது, தலைநகர் கார்தூம் நகரை ஒட்டிய பகுதிகளை அணுகுவது மிகவும் கடினமாக உள்ளது.
எனினும் கார்தூமிலிருந்து சூடான் துறைமுகம் வரையிலான 850 கி.மீ தொலைவுக்கு ஒரு தரைவழிப் பாதையை கண்டுபிடித்து. அத்துடன் துறைமுகத்தில் இந்திய கடற்படைக் கப்பல்கள் மற்றும் 2 விமானப்படை விமானங்கள் தரையிறங்கக்கூடிய வாய்ப்பை உருவாக்கி உள்ளது.
இந்த 850 கி.மீ. தூரத்தை கடப்பதற்கான பயண நேரம் 12 முதல் 18 மணிநேரம் வரை இருக்கும். மேலும் பஸ்களுக்கான டீசல் கிடைப்பதிலும் சிக்கல் உள்ளது.
இந்திய தூதரகத்தின் பங்கு
எனினும் இந்தியாவின் இடைவிடாத முயற்சிகளின் காரணமாக, இந்த உண்மையான சவால்களை எதிர்கொண்டு ஏராளமான இந்தியர்களை மீட்டு அழைத்து வர முடிந்தது.
கார்தூமில் உள்ள இந்திய தூதரகம் இரவு-பகலாக இந்த பணிகளை மேற்கொண்டு வருகிறது. சூடான் துறைமுகத்தில் இந்தியர்களுக்கு போதுமான ஆவணங்கள் கிடைப்பதிலும் இந்திய தூதரகம் முக்கிய பங்காற்றி வருகிறது.
இதுவரை 600-க்கு மேற்பட்ட இந்தியர்கள் நாடு திரும்பியுள்ள நிலையில், ஜெட்டாவில் சுமார் 500 பேரும், சூடான் துறைமுகத்தில் 320 பேரும் நாடு திரும்ப காத்திருக்கின்றனர்.
இவர்களை தவிர ஏராளமான இந்தியர்கள் கார்தூமில் இருந்து சூடான் துறைமுகம் நோக்கி பஸ்களில் சென்று கொண்டிருக்கின்றனர். ஒட்டுமொத்தமாக இதுவரை 1,700 முதல் 2,000 இந்தியர்கள் வரை சூடானில் இருந்து மீட்டு வெளியேற்றப்பட்டு உள்ளனர் என்று வினய் குவாத்ரா தெரிவித்தார்.