பஞ்சாப்பில் 31 கிலோ போதைப்பொருளுடன் ராணுவ வீரர் கைது
|பஞ்சாப்பில் 31 கிலோ போதைப்பொருளுடன் ராணுவ வீரரை போலீசார் கைது செய்தனர்.
பஞ்சாப்பில் எல்லை தாண்டிய போதைப்பொருள் கடத்தலை ஒழிக்க எல்லை பாதுகாப்பு படை வீரர்களும், மாநில போலீசாரும் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக எல்லையோர பகுதிகளில் போலீசார் மற்றும் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் சோதனை சாவடிகளை அமைத்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பஞ்சாப்பின் பாசில்கா மாவட்டத்தில் உள்ள சதர் பசில்கா பகுதியில் சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் அந்த வழியாக வந்த காரை நிறுத்தினார். காரில் சோதனை நடத்துவதற்கு முன் காரில் இருந்த நபர் தான் ராணுவ வீரர் என கூறி அடையாள அட்டையை காட்டிவிட்டு அங்கிருந்து வேகமாக சென்றார்.
இதனால் சந்தேகமடைந்த போலீசார் அனைத்து சோதனை சாவடிகளையும் உஷார் படுத்தினர். அதனை தொடர்ந்து ககன்-ஷம்ஷாபாத் சாலையில் உள்ள சோதனை சாவடியில் அந்த கார் தடுத்து நிறுத்தப்பட்டது. தொடர்ந்து அந்த காரில் சோதனையிட்டபோது 31 கிலோ எடையுள்ள 29 ஹெராயின் போதைப்பொருள் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அதனை தொடர்ந்து 26 வயதான ராணுவ வீரரையும், அவரது உதவியாளரையும் போலீசார் கைது செய்தனர்.