< Back
தேசிய செய்திகள்
தமிழக பெண் கொலையில் ராணுவ அதிகாரி கைது: பரபரப்பு தகவல்கள்
தேசிய செய்திகள்

தமிழக பெண் கொலையில் ராணுவ அதிகாரி கைது: பரபரப்பு தகவல்கள்

தினத்தந்தி
|
27 Feb 2023 12:53 AM GMT

அசாம் மாநிலத்தில் தமிழக பெண் கொலையில் ராணுவ அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

கவுகாத்தி,

அசாம் மாநிலம் காமரூப் மாவட்டத்தில் உள்ள சாங்சாரி பகுதியில் கடந்த 15-ந்தேதி ஒரு பெண் உடல் கைப்பற்றப்பட்டது. அந்த உடல் ஒரு பிளாஸ்டிக் பையில் திணிக்கப்பட்டு நெடுஞ்சாலையோரம் வீசப்பட்டிருந்தது. போலீசார் நடத்திய விசாரணையில் அந்தப் பெண், தமிழ்நாட்டைச் சேர்ந்த வந்தனாஸ்ரீ (வயது 35) என தெரியவந்தது. அவருடைய கொலைக்கு யார் காரணம் என போலீசார் விசாரித்தனர். அதில், அந்தக் கொலையின் பின்னணியில் அமரிந்தர் சிங் வாலியா என்ற ராணுவ அதிகாரி இருப்பது தெரியவந்தது.

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த அவர், லெப்டினன்ட் கர்னல் பதவி வகிக்கிறார். அசாம் தேஜ்பூரில் ராணுவ மக்கள்தொடர்பு அலுவலராக பணியாற்றுகிறார். கொலை செய்யப்பட்ட பெண்ணுக்கும், ராணுவ அதிகாரி அமரிந்தர் சிங்குக்கும் இடையே நீண்டகாலமாக தகாத உறவு இருந்துவந்துள்ளது. இந்நிலையில் அவரைப் பார்ப்பதற்காக அந்தப் பெண் வந்தனாஸ்ரீ கடந்த 14-ந் தேதி டெல்லியில் இருந்து கவுகாத்தி வந்துள்ளார். அவரை கொலை செய்ததை அமரிந்தர் சிங் ஒப்புக்கொண்டுள்ளார் என போலீசார் தெரிவித்தனர்.

ராணுவ அதிகாரி அமரிந்தர் சிங் வாலியாவிடம் நேற்று முன்தினம் விசாரித்த தேஜ்பூர் போலீசார், நேற்று அவரை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில், கொல்லப்பட்ட பெண், மேற்கு வங்காளத்தின் ஹவுரா ரெயில் நிலையத்தில் விட்டுச் சென்றதாக கருதப்படும் அவரது 4 வயது மகளை மீட்டிருப்பதாக அசாம் சோனிட்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்தார்.

மேலும் செய்திகள்