< Back
தேசிய செய்திகள்
ராணுவம் என்பது நிறுவனம் அல்ல.. விருப்பமுள்ளவர்கள் மட்டுமே வரலாம் - மத்திய மந்திரி வி.கே.சிங்
தேசிய செய்திகள்

"ராணுவம் என்பது நிறுவனம் அல்ல.. விருப்பமுள்ளவர்கள் மட்டுமே வரலாம்" - மத்திய மந்திரி வி.கே.சிங்

தினத்தந்தி
|
20 Jun 2022 1:28 AM IST

பேருந்துகளை, ரயில்களை எரிப்பவர்கள் ராணுவத்தில் சேர தகுதி அற்றவர்கள் என வி.கே. சிங் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

ராணுவத்துக்கு ஆள் சேர்க்க 'அக்னிபாத்' என்ற புதிய திட்டத்தை கடந்த 14-ந் தேதி மத்திய அரசு அறிவித்தது. 4 ஆண்டுகளுக்கு மட்டும் ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்கள் சேர்க்கப்படுகிறார்கள். இந்த திட்டத்துக்கு இளைஞர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வடமாநிலங்களில் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். குறிப்பாக தெலுங்கானா, உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம், ராஜஸ்தான், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் ஏராளமான இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சில இடங்களில் ரயில் எரிப்பு சம்பவங்களும், வன்முறைகளும் அரங்கேறியுள்ளன.

இந்த நிலையில் மத்திய மந்திரியும், ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவ தளபதியுமான வி.கே.சிங், இந்த விவகாரம் குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ராணுவம் என்பது வேலைவாய்ப்பு அளிக்கும் இடம் அல்ல என்றும் அது ஒரு கடையோ அல்லது நிறுவனமோ அல்ல என்றும் குறிப்பிட்டார்.

விருப்பம் உள்ளவர்கள் மட்டுமே ராணுவத்தில் இணையலாம் என்று தெரிவித்த அவர், உங்களை யாராவது ராணுவத்தில் இணைந்து தான் ஆக வேண்டும் என கட்டாயம் எதுவும் இல்லை என்று கூறினார்.

அக்னிபத் திட்டத்தின்படி ராணுவத்தில் ஒருவர் 4 ஆண்டுகாலம் பணியாற்றிவிட்டால், அதன் பிறகு அவரது எதிர்காலத்தை பார்த்துக்கொள்ளும் திறன் அவருக்கே வாய்த்துவிடும் என குறிப்பிட்ட வி.கே. சிங், அவருக்கு யாருடைய ஆதரவும் தேவை இருக்காது என்றார்.

மேலும் பேருந்துகளை, ரயில்களை எரிப்பவர்கள் இந்த பணியில் சேர தகுதி அற்றவர்கள் என தெரிவித்த வி.கே. சிங், இவ்வாறு எரித்தால் ராணுவத்தில் வேலை கிடைத்துவிடும் என்று யாராவது கூறினார்களா என்று கேள்வி எழுப்பினார்.

மேலும் செய்திகள்