< Back
தேசிய செய்திகள்
அர்மீனியாவுக்கு பினாகா ஏவுகணை உள்பட ரூ. 2 ஆயிரம் கோடிக்கு இந்தியா ஆயுத விற்பனை - பின்னணி என்ன?
தேசிய செய்திகள்

அர்மீனியாவுக்கு பினாகா ஏவுகணை உள்பட ரூ. 2 ஆயிரம் கோடிக்கு இந்தியா ஆயுத விற்பனை - பின்னணி என்ன?

தினத்தந்தி
|
30 Sept 2022 10:10 AM IST

அர்மீனியாவுக்கு பினாகா ஏவுகணைகள் உள்பட 2 ஆயிரம் கோடி ரூபாய் ஆயுதங்களை விற்பனை செய்ய இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதுடெல்லி,

சோவியத் குடியரசு வீழ்ச்சிக்கு பின் உருவான நாடுகள் அர்மீனியா மற்றும் அசர்பைஜான். இந்த இரு நாடுகளுக்கு இடையே நாக்ரோனா - கராபாக் என்ற மாகாணத்தை மையமாக கொண்டு எல்லைப்பிரச்சினை நீடித்து வருகிறது.

இந்த எல்லைப்பிரச்சினையில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். அந்த வகையில் கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கி 6 வாரங்கள் நடைபெற்ற போரில் அர்மீனியாவின் கட்டுப்பாட்டில் இருந்த நாக்ரோனா - கராபாக் மாகாணத்தின் பெரும் பகுதியை அசர்பைஜான் கைப்பற்றியது. இந்த போர் ரஷியாவின் தலையீட்டால் முடிவுக்கு வந்தது.

போர் முடிவுக்கு வந்தபோதும் தற்போது வரை அர்மீனியாக் - அசர்பைஜான் இடையே அவ்வப்போது எல்லையில் மோதல் நீடித்து வருகிறது. இந்த மோதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில் அர்மீனியாவுக்கு 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் பினாகா ஏவுகணைகள் உள்பட உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களை விற்பனை செய்ய இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது.

இதற்கு முன்னதாக அர்மீனியாவுக்கு கடந்த 2020-ம் ஆண்டு ரேடார் கருவிகளை வழங்கும் ஒப்பந்தம் செய்திருந்தது. ஆனால், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பினாகா ஏவுகணைகளை அர்மீனியாவுக்கு இந்தியா வழங்குவது இதுவே முதல்முறையாகும்.

இந்த ஏவுகணைகள் உள்பட இந்தியாவிடமிருந்து வாங்கும் ஆயுதங்களை அசர்பைஜானுடனான போரில் அர்மீனியா பயன்படுத்தும் என தகவல் வெளியாகியுள்ளது.

அர்மீனியாவுக்கு இந்தியா ஏவுகணை உள்ளிட்ட ஆயுதங்களை விற்பனை செய்வதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது.

அந்த வகையில், மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் உள்நாட்டில் உருவாக்கப்படும் ஆயுதங்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யும் முயற்சியை இந்தியா தீவிரப்படுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாக ஏற்கனவே பிலிப்பைன்ஸ் இந்தியாவிடமிருந்து பிரமோஸ் ஏவுகணைகளை வாங்கியுள்ள நிலையில் அதேபோல் அர்மீனியாவுக்கும் பினாகா ரக ஏவுகணைகளை விற்பனை செய்ய இந்தியா முன்வந்துள்ளது.

மேலும், காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ள நாடுகளில் ஒன்று அசர்பைஜான். அதேபோல், கடந்த சில ஆண்டுகளாக துருக்கி இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டில் உள்ளது. துருக்கி மற்றும் அசர்பைஜான் ஆகிய நாடுகள் காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டையும் எடுத்துள்ளன.

அர்மீனியாவுடனான போரில் அசர்பைஜானுக்கு துருக்கி மற்றும் பாகிஸ்தான் ஆயுத உதவிகளை வழங்கி வருகின்றன. குறிப்பாக, துருக்கி அசர்பைஜானுக்கு அதிக அளவிலான ராணுவ உதவி செய்து வருகிறது.

சமீபத்தில் ஐ.நா. பொதுக்கூட்டத்தில் பேசிய துருக்கி அதிபர் காஷ்மீர் விவகாரத்தை மீண்டும் எழுப்பினார். அவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த இந்தியா, துருக்கிக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்கத்தொடங்கியுள்ளது.

மத்திய தரைக்கடல் பகுதியில் உள்ள தீவு நாடு சைப்ரஸ். இந்த நாட்டின் மீது படையெடுத்து அந்த தீவு நாட்டின் ஒரு பகுதியை துருக்கி கைப்பற்றியுள்ளது. கிரேக்க மொழி பண்பாட்டை அதிக அளவில் பின்பற்றும் சைப்ரஸ் நாடு கிரீஸ் மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் தொடர்புடையதாகும். இதன் காரணமாக சைப்ரஸ் தீவு விவகாரத்தில் கிரீஸ் மற்றும் துருக்கி இடையே ஏற்கனவே பிரச்சினை நிலவி வருகிறது.

காஷ்மீர் விவகாரத்தில் துருக்கி இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்த நிலையில் சமீபத்தில் இந்தியாவும் துருக்கிக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் சைப்ரஸ் விவகாரத்தில் துருக்கிக்கு எதிரான நிலைப்பாட்டை இந்தியா எடுத்திருந்தது. தற்போது, போரில் அசர்பைஜானுக்கு துருக்கி ஆதரவாக உள்ள நிலையில் அர்மீனியாவுக்கு இந்தியா ஆயுத உதவிகளை வழங்குவதும் சர்வதேச கவனம் பெற்றுள்ளது. இந்த போரில் ரஷியா அர்மீனிய ஆதரவு நிலைப்பாட்டில் இருந்து வரும் நிலையில் உக்ரைனுடனான போரால் இந்த விவகாரத்தில் ரஷியா மென்மை போக்கை கடைபிடித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

காஷ்மீர் விவகாரம் உள்பட பல பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும், இந்தியாவுக்கு எதிராகவும் துருக்கி மற்றும் அசர்பைஜான் செய்பட்டு வரும் சூழ்நிலையில் போரில் துருக்கி மற்றும் அசர்பைஜானுக்கு எதிராக அர்மீனியாவுக்கு ஆயுத விற்பனை செய்ய இந்தியா முன்வந்துள்ளது சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.

மேலும் செய்திகள்