< Back
தேசிய செய்திகள்
கேரளாவின் நெய்யாறு வனப்பகுதிக்கு செல்லும் அரிசிக்கொம்பன் யானை - கண்காணிப்பு தீவிரம்
தேசிய செய்திகள்

கேரளாவின் நெய்யாறு வனப்பகுதிக்கு செல்லும் அரிசிக்கொம்பன் யானை - கண்காணிப்பு தீவிரம்

தினத்தந்தி
|
12 Jun 2023 9:15 PM IST

மேல்கோதையாறு பகுதியில் தான் அரிசிக்கொம்பன் சுற்றி வருகிறது.

திருவனந்தபுரம்,

களக்காடு முண்டந்துறை வனச்சரகத்தில் விடப்பட்டுள்ள அரிசிக்கொம்பன் யானை, நமது குடியிருப்பு பகுதிக்கு வந்துவிடுமோ என்ற அச்சம் ஒருபுறம், கேரளாவுக்கு சென்று விடும் என்ற நம்பிக்கை மறுபுறம் என கடந்த சில நாட்களாக திருநெல்வேலி, கன்னியாகுமரி மலையோர கிராம மக்கள் உள்ளனர்.

ஆனால் அரிசிக்கொம்பன் நடமாட்டத்தை ரேடியோ காலர் சிக்னல் மூலம் கண்காணிக்கும் 2 மாவட்ட வனத்துறையினரும், யானை குடியிருப்பு பகுதிக்கு வர வாய்ப்பில்லை. தான் விடப்பட்ட மேல்கோதையாறு பகுதியில் தான் அரிசிக்கொம்பன் சுற்றி வருகிறது. அங்கிருந்து சுமார் 5 அல்லது 6 கி.மீட்டருக்குள் தான் அதன் நகர்வு உள்ளது.

முத்துக்குழிவயல், குற்றியார் பகுதிகளில் தேவையான உணவு, குளிர்ந்த குடிநீர் கிடைப்பதால் அரிசிக் கொம்பன் யானை நல்ல நிலையில் இருப்பதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் அரிசிக்கொம்பன் தற்போது இருக்கும் வனப்பகுதி கன்னியாகுமரி வனவிலங்கு சரணாலயம், கேரள மாநிலம் நெய்யாறு வனவிலங்கு சரணாலயம் பகுதிகளை ஒட்டியே உள்ளது. இதனால் கேரள வனத்துறையினரும் அரிசிக்கொம்பன் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

நெய்யாறு வனவிலங்கு சரணாலயத்தில் இருந்து 15 கி.மீட்டர் தொலைவில் இருக்கும் அரிசிக்கொம்பன், கேரள மாநிலத்துக்குள் நுழைய வாய்ப்பு இருப்பதாக கருதும் அவர்கள், ரேடியோ காலர் சிக்னலை பெறும் ஆண்டெனாவை, பெரியார் வனச்சரக அலுவலகத்தில் கேட்டனர். அதன்படி திருவனந்தபுரம் வனவிலங்கு பிரிவுக்கு விரைவில் இந்த ஆண்டெனா கொண்டு வரப்படும் என அவர்கள் தெரிவித்துள்ளனர். அரிசிக் கொம்பன் யானை காட்டில் நலமாக உள்ளதாக வனத்துறையினர் கூறி வந்தாலும், யானை பிரியர்கள் அதனை நம்ப மறுக்கின்றனர்.

இரவும் பகலுமாக தினமும் 40 முதல் 50 கி.மீட்டர் தூரம் நடக்கும் யானை, தற்போது 6 கி.மீட்டர் தூரம் மட்டுமே நடந்துள்ளதாக தெரிகிறது. அரிசிக்கொம்பன் காலிலும், தும்பிக்கையிலும் காயத்துடன் இருப்பதால் தான் அதிக தூரம் பயணிக்கவில்லை என்று அவர்கள் கூறுகின்றனர்.

மேலும் செய்திகள்