அரியானா: திருட்டில் ஈடுபட்ட சிறுவர்கள் பெற்றோர் சம்மதத்துடன் அரை நிர்வாண ஊர்வலம்
|அரியானாவில் திருடிய குற்றத்திற்காக 3 சிறுவர்கள் தெருவில் அரை நிர்வாண கோலத்தில் இழுத்து செல்லப்பட்டனர்.
யமுனா நகர்,
அரியானாவின் யமுனா நகரில் கர்வான் கிராமத்தில் இரும்பு கதவில் இருந்த இரும்பு பொருட்களை சிறுவர்கள் 3 பேர் திருடி கொண்டு சென்றுள்ளனர். இதுபற்றி அறிந்த அதன் உரிமையாளர் கிராம பஞ்சாயத்தில் புகார் தெரிவித்து உள்ளார்.
இதுபற்றி அந்த கிராமத்தில் வசிக்கும் ரத்தன் சிங் என்பவர் கூறும்போது, அந்த சிறுவர்கள் திருடிய பின்னர், பழைய இரும்பு உள்ளிட்ட பொருட்களை வாங்கும் கடைக்கு, அவற்றை விற்பதற்காக சென்றுள்ளனர். அப்போது, அவர்களை பிடித்து பஞ்சாயத்துக்கு அழைத்து சென்றனர்.
இதனை தொடர்ந்து, சிறுவர்களின் பெற்றோரை அழைத்து வர பஞ்சாயத்தில் உத்தரவிடப்பட்டது. அவர்கள் வந்ததும் விசாரணை தொடங்கியது. இதில் இரும்பு பொருட்களை திருடிய விவரங்களை 3 சிறுவர்களும் ஒப்பு கொண்டனர்.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், ஆத்திரமடைந்தனர். அதன்பின்பு, குற்றச்சாட்டுக்கு ஆளான சிறுவர்களுக்கு ஒரு பாடம் கற்பிக்கும் வகையில் தக்க தண்டனையை தரவேண்டும் என்று பஞ்சாயத்தில் பெற்றோர் கேட்டு கொண்டனர்.
இதன்பின், சிறுவர்கள் 3 பேரையும் அரை நிர்வாண கோலத்தில் தெருவில் இழுத்து செல்லும்படி உத்தரவு வெளிவந்தது. பஞ்சாயத்து, உத்தரவின்படி சிறுவர்களும் கிராமத்தில் தெருவின் வழியே அரைநிர்வாண ஊர்வலத்தில் அழைத்து செல்லப்பட்டனர்.
இதனை கிராம மக்கள் சிலர் வீடுகளில் இருந்தபடி வீடியோவாக எடுத்தனர். அது சமூக ஊடகங்களில் பரவிய நிலையில், போலீசாரின் கவனத்திற்கு சென்றது. அவர்கள் உடனடியாக சம்பவ பகுதிக்கு சென்று அதுபற்றிய விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.