கணவனுடன் தகராறு: வாய் பேச முடியாத மகனை கால்வாயில் வீசிய தாய்.. அடுத்து நடந்த கோர சம்பவம்
|கணவன்-மனைவி இடையேயான தகராறில் கால்வாயில் தூக்கி வீசப்பட்ட வாய் பேச முடியாத மகனை முதலை கடித்து கொன்றது.
பெங்களூரு,
கர்நாடகா மாநிலம் உத்தரகன்னடா மாவட்டம் தாண்டேலி தாலுகா ஹலமாடி பகுதியை சேர்ந்தவர் ரவிக்குமார். இவரது மனைவி சாவித்திரி. இந்த தம்பதியின் மகன் வினோத் (வயது 6). இவன் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி ஆவான்.
வினோத் வாய் பேசமுடியாத மாற்றுத்திறனாளி என்பதால் அவனை ரவிக்குமாருக்கு பிடிக்காமல் இருந்து வந்தது. மேலும் ரவிக்குமார் அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். அத்துடன் வாய் பேச முடியாத மகன் சாக வேண்டும் என்றும் ரவிக்குமார் கூறி வந்துள்ளார்.
இதன்காரணமாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவும் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த சாவித்திரி நேற்று முன்தினம் இரவு தனது மகன் வினோத்தை அழைத்து கொண்டு வெளியே சென்றார்.
அடிக்கடி, மகனை சாக வேண்டும் என ரவிக்குமார் கூறி வந்ததால் சாவித்திரி தனது மகன் வினோத்தை அங்குள்ள கால்வாயில் தூக்கி வீசி உள்ளார். மகனை கால்வாயில் தூக்கி வீசிய பிறகு வருந்திய சாவித்திரி, தாண்டேலி புறநகர் போலீஸ் நிலையத்துக்கு சென்று நடந்த சம்பவங்களை கூறி கதறி அழுதுள்ளார். இதையடுத்து போலீசார், தீயணைப்பு படையினர், நீச்சல் வீரர்களுடன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இரவு முழுவதும் சிறுவன் வினோத்தை தேடும் பணி நடந்தது.
நீண்ட நேர போராட்டத்துக்கு பிறகு நேற்று காலை சிறுவன் வினோத் பிணமாக மீட்கப்பட்டான். மேலும் அவனது வலது கை துண்டாகி இருந்ததுடன் உடல் முழுவதும் காயங்கள் இருந்தது. சாவித்திரி தனது மகனை தூக்கி வீசிய கால்வாயில் முதலைகள் நிறைந்து காணப்படுவதாக தெரிகிறது. இதனால், சிறுவன் வினோத்தை முதலை உயிருடன் கடித்து கொன்றது உறுதி செய்யப்பட்டது.
அதாவது, சாவித்திரி தனது மகனை கால்வாயில் வீசிய சிறிது நேரத்திலேயே முதலை சிறுவனை கடித்து இழுத்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சிறுவன் வினோத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ரவிக்குமார், அவரது மனைவி சாவித்திரி ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கணவன்-மனைவி இடையேயான தகராறில் கால்வாயில் தூக்கி வீசப்பட்ட வாய் பேச முடியாத மகனை முதலை கடித்து கொன்ற கொடூர சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.