< Back
தேசிய செய்திகள்
சட்டசபையில் பா.ஜனதா-காங்கிரஸ் உறுப்பினர்கள் வாக்குவாதம்
தேசிய செய்திகள்

சட்டசபையில் பா.ஜனதா-காங்கிரஸ் உறுப்பினர்கள் வாக்குவாதம்

தினத்தந்தி
|
13 Sept 2022 9:28 PM IST

சித்தராமையா கார் மீது முட்டை வீச்சு சம்பவம் தொடர்பாக கர்நாடக சட்டசபையில் பா.ஜனதா-காங்கிரஸ் உறுப்பினர்கள் இடையே வாக்குவாதம் உண்டானது.

பெங்களூரு:

சித்தராமையா கார் மீது முட்டை வீச்சு சம்பவம் தொடர்பாக கர்நாடக சட்டசபையில் பா.ஜனதா-காங்கிரஸ் உறுப்பினர்கள் இடையே வாக்குவாதம் உண்டானது.

சபை ஒத்திவைப்பு

கர்நாடக சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் நேற்று முன்தினம் பெங்களூரு விதான சவுதாவில் தொடங்கியது. முதல் நாளில் மந்திரி உமேஷ்கட்டி, இங்கிலாந்து ராணி எலிசபெத் உள்ளிட்ட முன்னாள் உறுப்பினர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து சட்டசபை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் சட்டசபை கூட்டத்தொடரின் 2-வது நாள் கூட்டம் பெங்களூரு விதான சவுதாவில் நேற்று காலை தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும் கேள்வி நேரம் எடுத்து கொள்ளப்பட்டது. அதைத்தொடர்ந்து பூஜ்ஜிய நேரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது.

அதன் பிறகு எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, கர்நாடகத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் குறித்து ஒத்திவைப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார். அதை சபையின் 69-வது விதிக்கு மாற்றி சபாநாயகர் காகேரி விவாதத்திற்கு அனுமதி வழங்கினார். இதையடுத்து சித்தராமையா பேசியதாவது:-

முன்எச்சரிக்கை நடவடிக்கை

கர்நாடகத்தில் கனமழை பெய்து பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டது. விவசாய பயிர்கள் நீரில் மூழ்கி விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இந்த அரசு இதுவரை நிவாரணம் வழங்கவில்லை. மேலும் நிவாரணமாக வழங்கும் தொகையும் குறைவாக உள்ளது. கேட்டால், தேசிய இயற்கை பேரிடர் நிவாரண விதிகள்படி அரசு நிவாரணம் வழங்குகிறது. அதனால் இந்த இயற்கை பேரிடர் நிவாரண நிதி வழங்கும் விதிமுறைகளை திருத்தும்படி மத்திய அரசை நாம் வலியுறுத்த வேண்டும்.

கடந்த 2019-ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தால் சேதம் அடைந்த ஒரு லட்சம் வீடுகளுக்கு இந்த அரசு இன்னும் நிவாரணம் வழங்கவில்லை. கடந்த 2021-ம் ஆண்டு தாக்கிய புயலால் சேதம் அடைந்த வீடுகளுக்கும் நிவாரணம் வழங்கவில்லை. கர்நாடகத்தில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்தது. ஆனால் அரசு தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை.

முட்டை வீச்சு சம்பவம்

வெள்ளம் காரணமாக நெல், நிலக்கடலை, சோயாபீன்ஸ், சோளம், கரும்பு, பருத்தி உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. பெங்களூருவில் பெய்த கனமழையால் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அளவுக்கு வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக விவசாயிகளுக்கு ரூ.2 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

வெள்ள பாதிப்புகளை பார்வையிட நான் குடகிற்கு சென்றேன். ஆனால் எனது கார் மீது முட்டைகளை வீசி தாக்குதல் நடத்தினர். கல் வீசுவது, கருப்பு கொடி காட்டுவது, முட்டை வீசுவது போன்ற சம்பவங்களில் நாங்களும் ஈடுபட்டுள்ளோம். எனது கார் மீது முட்டை வீச்சு சம்பவம் நடைபெற பா.ஜனதாவை சேர்ந்த அப்பச்சு ரஞ்சன் எம்.எல்.ஏ. தான் காரணம்.

இவ்வாறு சித்தராமையா பேசினார்.

வாக்குவாதம்

அப்போது அப்பச்சு ரஞ்சன் குறுக்கிட்டு, காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களே உங்களின் கார் மீது முட்டை வீசினர் என்று கூறினார். அப்போது பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் சபையில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்