கடபாவில் அர்ச்சகர் வீட்டில் புகுந்து ரூ.2¾ லட்சம் நகைகள் திருட்டு
|கடபாவில் அர்ச்சகர் வீட்டில் மர்மநபர்கள் புகுந்து ரூ.2¾ லட்சம் நகைகளை திருடி சென்றுள்ளனர்.
மங்களூரு-
தட்சிண கன்னடா மாவட்டம் கடபா தாலுகா சுப்பிரமணியா பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணராஜ பட். இவர் அப்பகுதியில் உள்ள மடத்தில் அர்ச்சகராக உள்ளார். கிருஷ்ணராஜ பட் தனது குடும்பத்தினருடன் வீட்டை பூட்டிவிட்டு சொந்த ஊரான உடுப்பிக்கு சென்றிருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர் தனது வீட்டுக்கு திரும்பி வந்தார்.
அப்போது அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். வீட்டுக்குள் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும் பீரோ உடைக்கப்பட்டு உள்ளே இருந்த தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் மாயமாகி இருந்தது.
இதை பார்த்த அவருக்கு, யாரோ மர்மநபர்கள், வீட்டின் ஓட்டை பிரித்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த ரூ.2.80 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள், வெள்ளி பொருட்களை திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து கிருஷ்ணராஜ பட், சுப்பிரமணியா போலீசில் புகார் அளித்தார். அதன்ேபரில் சம்பவ இடத்திற்கு சென்று போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் மர்மநபர்கள் ஓட்டை பிரித்து வீட்டிற்குள் புகுந்து தங்க நகைகள், வெள்ளி பொருட்களை திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.