போலீசார் மீது பாரபட்சம் பார்க்காமல் நடவடிக்கை; மந்திரி அரக ஞானேந்திரா பேச்சு
|சைபர் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க தவறும் போலீசார் மீது பாரபட்சம் பார்க்காமல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா தெரிவித்துள்ளார்.
பெலகாவி:
சைபர் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க தவறும் போலீசார் மீது பாரபட்சம் பார்க்காமல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா தெரிவித்துள்ளார்.
அரசு எடுத்த நடவடிக்கை
பெலகாவி சுவர்ணசவுதாவில் கர்நாடக சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் 2 நாட்கள் விடுமுறைக்கு பின்பு நேற்று கூடியது. அப்போது கேள்வி நேரத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான பி.ஆர்.ரமேஷ் எழுந்து பேசுகையில், சமூக வலைதளங்களில் ஆபாச வீடியோக்கள் பரப்பப்படுகிறது. இதன்மூலம் மாணவிகள் பாதிக்கப்படுகின்றனர். சைபர் குற்றங்கள் அதிகரித்து விட்டது. இந்த விவகாரத்தில் அரசும், போலீசாரும் எடுத்த நடவடிக்கைகள் என்ன?, என்றார்.
இதற்கு போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா பதிலளித்து பேசியதாவது:-
போலீசாருக்கு பயிற்சி
மாநிலத்தில் சைபர் குற்றங்கள் நடைபெறுவதை தடுக்க, சைபர் குற்றங்களில் ஈடுபட்டு மக்களை ஏமாற்றும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட, முக்கியமான நகர் பகுதிகளில் சைபர் கிரைம் போலீஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. பெங்களூருவை பொறுத்த வரை 8 மண்டலங்களுக்கும் தலா ஒரு சைபர் கிரைம் போலீஸ் நிலையம் இருக்கிறது. சி.ஐ.டி. மற்றும் சைபர் கிரைம் போலீசார், சமூக வலைதளங்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். சி.ஐ.டி. மற்றும் சைபர் கிரைம் போலீசார், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள தடயவியல் ஆய்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு, அங்கு சிறப்பு பயிற்சிகளை பெற்று வந்துள்ளனர். கர்நாடகத்திலும் தடயவியல் ஆய்வு பல்கலைக்கழகம் தொடங்குவதற்கு மத்திய உள்துறை அனுமதி வழங்கி இருக்கிறது.
மக்களிடம் விழிப்புணர்வு
சைபர் கிரைம் குற்றங்கள் நடைபெறுவதை தடுக்க மக்களிடம் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். சைபர் குற்றவாளிகள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருவதுடன், அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக கர்நாடக போலீஸ் சட்டத்திலும் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. சைபர் கிரைம் குற்றம் நடந்தும், குற்றவாளிகள் மீது சரியான நடவடிக்கை எடுக்க தவறும் போலீசார் மீதும் பாரபட்சம் பார்க்காமல் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அரக ஞானேந்திரா கூறினார்.