கருணை அடிப்படையில் பணி நியமனம் சலுகை தானே தவிர, அது உரிமையாகாது - சுப்ரீம் கோர்ட்டு
|கருணை அடிப்படையில் வழங்கப்படும் பணி நியமனமானது சலுகைதானே தவிர, அது உரிமையாகாது என்று சுப்ரீம் கோர்ட்டு தெளிவுபடுத்தியிருக்கிறது.
புதுடெல்லி,
கருணை அடிப்படையில் வழங்கப்படும் பணி நியமனமானது சலுகைதானே தவிர, அது உரிமையாகாது என்று சுப்ரீம் கோர்ட்டு தெளிவுபடுத்தியிருக்கிறது. கேரள மாநிலத்தைச் சேர்ந்த அனுஶ்ரீ என்பவரது தந்தை திருவாங்கூர் உரங்கள் மற்றும் ரசாயனம் நிறுவனத்தில் உதவியாளராக பணியாற்றியுள்ளார். பணியின் போது உயிரிழந்த தந்தையின் பணியை கருணை அடிப்படையில் வழங்கக்கோரி அனுஶ்ரீ, 14 ஆண்டுகள் கழித்து மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவில் தான் சுப்ரீம் கோர்ட்டு இந்த கருத்தை தெரிவித்துள்ளது.
அரசுப் பணிகளில் நியமனங்களை பொறுத்தவரை விண்ணப்பதாரர்கள் அனைவருக்கும் சமமான வாய்ப்பை வழங்க வேண்டுமென்றுதான் அரசமைப்புச் சட்டம் 14 மற்றும் 16 பிரிவுகள் தெளிவுபடுத்துகின்றன. இருப்பினும் கருணை அடிப்படையில் வழங்கப்படும் பணிநியமனங்களுக்கான விதிவிலக்கு என்பது அளிக்கப்படுகிறது.
அரசுப்பணியில் இருக்கும் ஒருவர் இறந்துவிடும்போது அவரது குடும்பத்திற்கான எவ்வித வாழ்வாதாரமும் இல்லை எனும் பட்சத்திலும் அவரது குடும்பத்திற்கு கஷ்டமான சூழலில் உதவும் நோக்கத்திலும் மட்டுமே அவரைச் சார்ந்திருக்கும் குடும்ப உறுப்பினருக்கு விதிவிலக்கு அடிப்படையில் இந்த கருணை அடிப்படையிலான பணி என்பது வழங்கப்படுகிறது.
கருணை அடிப்படையில் ஒருவர் பணி நியமனம் செய்யப்படுவது சலுகை தானே தவிர அது உரிமையாகாது என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது. இந்த வழக்கை பொறுத்தவரையில் அனுஶ்ரீயின் தாயார் ஏற்கெனவே சுகாதாரத்துறையில் பணியில் இருந்ததாகவும் அவர் தந்தை இறந்தபோது அனுஶ்ரீ மைனராக இருந்ததாகவும் 14 ஆண்டுகள் கழித்து இந்த பணியை வழங்க வேண்டுமென்றும் தெரிவித்ததால் சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.