ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சிக்கான நாடாளுமன்ற தேர்தல் ஒருங்கிணைப்பாளர்கள் நியமனம்
|நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன.
அமராவதி,
2024 நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தலை எதிர்கொள்வதற்காக அரசியல் கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன. தேர்தலை முன்னிட்டு எதிர்கட்சிகள் இணைந்து 'இந்தியா' கூட்டணியை உருவாக்கியுள்ளன.
இதனிடையே காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை தேர்தல் பணிகள் குறித்து அனைத்து மாநில காங்கிரஸ் நிர்வாகிகளுடன் பல்வேறு கட்ட ஆலோசனைகளை நடத்தி வருகிறார். முன்னதாக காங்கிரஸ் கட்சி சார்பில் 'வார் ரூம்', தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கான குழு, நேர்காணல் குழு உள்ளிட்ட குழுக்கள் அமைக்கப்பட்டு தேர்தல் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் ஆந்திர பிரதேச மாநில காங்கிரஸ் கட்சிக்கான நாடாளுமன்ற தேர்தல் ஒருங்கிணைப்பாளர்கள் தற்போது நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான ஒப்புதலை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைமையகம் வழங்கியுள்ளதாக காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.