< Back
தேசிய செய்திகள்
கூடுதல் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக ரா அமைப்பின் முன்னாள் தலைவர் நியமனம்
தேசிய செய்திகள்

கூடுதல் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக ரா அமைப்பின் முன்னாள் தலைவர் நியமனம்

தினத்தந்தி
|
3 July 2024 2:10 AM IST

இந்தியாவின் துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் ரா அமைப்பின் முன்னாள் தலைவரான ராஜீந்தர் கண்ணா, கூடுதல் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

புதுடெல்லி,

நாட்டின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பாதுகாப்பு தொடர்புடைய அனைத்து விவகாரங்களையும் கையாளும் அமைப்பாக தேசிய பாதுகாப்பு கவுன்சில் இருந்து வருகிறது. பிரதமர் மோடி தலைமையின் கீழ் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகம் செயல்பட்டு வருகிறது. இதன் செயலாளராக அஜித் தோவல் செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில், உளவுப்பிரிவில் சிறப்பு இயக்குநராக உள்ள டி.வி. ரவிச்சந்திரன், துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டு உள்ளார். இதேபோன்று, துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் ரா அமைப்பின் முன்னாள் தலைவரான ராஜீந்தர் கண்ணா, கூடுதல் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

இதுபற்றிய அறிவிப்பு ஒன்றை மத்திய அரசு நேற்று வெளியிட்டு உள்ளது. இதற்கு மத்திய மந்திரி சபையின் நியமன கமிட்டி ஒப்புதல் அளித்துள்ளது.

ராஜீந்தர் கண்ணா, ஒடிசாவில் இருந்து 1978-ம் ஆண்டு ஐ.பி.எஸ். அதிகாரியாக ஆனவர். 2014-ம் ஆண்டு டிசம்பர் முதல் 2016-ம் ஆண்டு டிசம்பர் வரை ரா அமைப்பின் முன்னாள் தலைவராக இருந்திருக்கிறார். 2018-ம் ஆண்டு துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.

வெளியுறவு செயலாளராக கடந்த மாதம் விக்ரம் மிஸ்த்ரி அறிவிக்கப்பட்ட நிலையில், ரவிச்சந்திரன் துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டு உள்ளார். நடப்பு ஆண்டு ஆகஸ்டில் அவர் ஓய்வு பெற இருந்த நிலையில், இந்த பதவி நியமனம் அமைந்துள்ளது.

மேலும் செய்திகள்