< Back
தேசிய செய்திகள்
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு புதிய மசோதா - காங்கிரஸ், ஆம் ஆத்மி எதிர்ப்பு
தேசிய செய்திகள்

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு புதிய மசோதா - காங்கிரஸ், ஆம் ஆத்மி எதிர்ப்பு

தினத்தந்தி
|
11 Aug 2023 4:47 AM IST

தலைமை தேர்தல் கமிஷனர் மற்றும் தேர்தல் கமிஷனர்களை தேர்வு செய்யும் குழுவில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிக்கு இடமளிக்காத மசோதாவை மத்திய அரசு உருவாக்கி உள்ளது.

புதுடெல்லி,

மத்திய அரசின் சிபாரிசின்பேரில், தலைமை தேர்தல் கமிஷனர், தேர்தல் கமிஷனர்கள் ஆகியோரை ஜனாதிபதி நியமித்து வருகிறார்.

இதற்கிடையே, இதுதொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையில் 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சட்ட அமர்வு, இனிமேல் அவர்களை பிரதமர், மக்களவை எதிர்க்கட்சி தலைவர், சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய தேர்வு குழுவின் சிபாரிசின்பேரில் ஜனாதிபதி நியமிக்க வேண்டும் என்று கடந்த மார்ச் மாதம் தீர்ப்பு அளித்தது.

புதிதாக சட்டம் உருவாக்கும்வரை இந்த முறையை கடைபிடிக்க வேண்டும் என்று கூறியது.

தலைமை நீதிபதிக்கு பதில் கேபினட் மந்திரி

ஆனால், இந்த தீர்ப்பை நீர்த்துப் போகச்செய்யும்வகையில் மத்திய அரசு புதிய மசோதா ஒன்றை தயாரித்துள்ளது. அதற்கு 'தலைமை தேர்தல் கமிஷனர் மற்றும் தேர்தல் கமிஷனர்கள் நியமன பணி நிபந்தனைகள் மசோதா' என்று பெயர்.

இந்த மசோதாவில், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு மாறாக, தேர்வுக்குழுவில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சேர்க்கப்படவில்லை. அதற்கு பதிலாக, கேபினட் மந்திரி சேர்க்கப்பட்டுள்ளார்.

யாரை நியமிக்க வேண்டும்?

மசோதாவில் உள்ள இதர முக்கிய அம்சங்கள் வருமாறு:-

மக்களவை எதிர்க்கட்சி தலைவர் பதவி காலியாக இருந்தால், எதிர்க்கட்சிகளிடையே அதிக இடங்களை பெற்ற கட்சியின் தலைவர், தேர்வுக்குழுவில் சேர்க்கப்பட வேண்டும். அப்பதவி காலியாக இருந்தாலோ, தேர்வுக்குழு உறுப்பினர்கள் நியமனத்தில் ஏதேனும் குறைபாடு இருந்தாலோ அதை வைத்து தேர்தல் கமிஷனர்கள் நியமனத்தை செல்லாது என்று கூற முடியாது.

செயலாளர் அந்தஸ்துக்கு சமமான அதிகாரிகள் மற்றும் நேர்மையானவர்கள், தேர்தல் நடத்தும் அனுபவம் அல்லது அறிவு பெற்றவர்களில் இருந்து தேர்தல் கமிஷனர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

அத்தகையவர்களை மந்திரிசபை செயலாளர் தலைமையில் 3 பேர் அடங்கிய குழு, பிரதமர் தலைமையிலான தேர்வுக்குழுவின் பரிசீலனைக்கு முன்வைக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இம்மசோதா, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது.

கெஜ்ரிவால் கண்டனம்

அதே சமயத்தில், மசோதாவுக்கு சில எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கூறியிருப்பதாவது:-

டெல்லி நிர்வாக மசோதாவை தயாரிக்கும்போதே சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக இதுபோன்ற மசோதாக்களை மத்திய அரசு தயாரிக்கும் என்று நான் கூறியிருந்தேன். அதுதான் நடந்துள்ளது.

தேர்வுக்குழுவில் 2 பேர் பா.ஜனதாவையும், ஒருவர் காங்கிரசையும் சேர்ந்தவர்களாக உள்ளனர். எனவே, யார் தேர்தல் கமிஷனராக தேர்ந்தெடுக்கப்பட்டாலும், பா.ஜனதாவுக்கு விசுவாசமாக இருப்பார்கள். இது நேர்மையான தேர்தலை பாதிக்கும் ஆபத்தான போக்கு என்று அவர் கூறியுள்ளார்.

தேர்தலுக்கு முன்பு...

மக்களவை காங்கிரஸ் கொறடா மாணிக்கம் தாகூர், ''பிரதமர் மோடியும், அமித்ஷாவும் இந்த மசோதா மூலம் தேர்தல் கமிஷனை கட்டுப்படுத்த விரும்புகின்றனர். அனைத்து ஜனநாயக சக்திகளும் இதை எதிர்க்க வேண்டும். பிஜு ஜனதாதளமும், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரசும் எதிர்க்குமா?'' என்று கூறியுள்ளார்.

காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் கூறியிருப்பதாவது:-

பாரபட்சமற்ற தேர்தல் கமிஷனை அமைக்க சுப்ரீம் கோர்ட்டு விரும்பும்போது, பாரபட்சமான தேர்தல் கமிஷனரை பிரதமர் ஏன் விரும்புகிறார்? இது தன்னிச்சையான, நேர்மையற்ற மசோதா. இதை எதிர்ப்போம். தேர்தல் கமிஷனை பிரதமரின் கைப்பாவை போல் மாற்ற முயற்சிக்கின்றனர் என்று அவர் கூறியுள்ளார்.

அடுத்த ஆண்டு பிப்ரவரி 14-ந் தேதி, தேர்தல் கமிஷனர் அனுப் சந்திர பாண்டே ஓய்வு பெறுகிறார். அதனால் காலியிடம் ஏற்படும். அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்புக்கு சில நாட்கள் முன்பாக அவர் ஓய்வு பெறுகிறார்.

அவருக்கு பதிலாக தலைமை நீதிபதி இல்லாத தேர்வுக்குழு, புதிய தேர்தல் கமிஷனரை தேர்வு செய்யும் என்பதால், இம்மசோதா முக்கியத்துவம் பெறுகிறது.

மேலும் செய்திகள்