10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ஆண்டுக்கு இருமுறை எழுதுவது கட்டாயம் அல்ல- மத்திய கல்வி மந்திரி
|10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ஆண்டுக்கு இருமுறை எழுதுவது கட்டாயம் அல்ல என்று மத்திய கல்வி மந்திரி விளக்கம் அளித்துள்ளார்.
ஆண்டுக்கு இருமுறை தேர்வு
மத்திய கல்வி அமைச்சகம் கடந்த ஆகஸ்டு மாதம் புதிய பாடத்திட்ட கட்டமைப்பை அறிவித்தது. அதன்படி, மாணவர்கள் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ஆண்டுக்கு இருமுறை எழுதலாம் என்று கூறியது. மாணவர்கள் தேர்வுக்கு சிறப்பாக தயாராக போதிய கால அவகாசம் அளிக்கவும், இரு தேர்வுகளில் எது அதிக மதிப்பெண்ணோ, அதை தக்க வைத்துக்கொள்ளவும் இந்த வாய்ப்பு அளிக்கப்பட்டது.
இந்நிலையில், மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் நேற்று ஒரு செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது:-
ஆண்டுக்கு இருமுறை பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்ட பிறகு மாணவர்களை சந்தித்தேன். அவர்கள் அதை வரவேற்றனர். நல்ல யோசனை என்று கூறினர். 2024-ம் ஆண்டில் இருந்தே ஆண்டுக்கு இருமுறை பொதுத்தேர்வு நடத்தும் திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளோம்.
மன அழுத்தம்
மாணவர்கள் பொதுத்தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்தால், தங்களுக்கு ஓராண்டு வீணாகி விட்டதாக கருதுகின்றனர். தங்கள் வாய்ப்பு பறிபோய் விட்டதாகவும், இன்னும் சிறப்பாக படித்து இருக்கலாமே என்றும் நினைக்கின்றனர். எனவே, ஒருமுறை மட்டும் தேர்வு நடத்துவதால் ஏற்படும் மனஅழுத்தத்தை தவிர்க்கவே இருமுறை தேர்வு அறிமுகப்படுத்தப்படுகிறது. என்ஜினீயரிங் படிப்புக்கான ஜே.இ.இ. நுழைவுத்தேர்வை ஆண்டுக்கு இருமுறை நடத்துவதுபோல்தான் இதை நடத்த உள்ளோம்.
கட்டாயம் அல்ல
மாணவர்கள், முதல் பொதுத்தேர்விலேயே தாங்கள் சிறந்த மதிப்பெண் எடுத்திருப்பதாக கருதினால், இரண்டாவது தேர்வை எழுத தேவையில்லை. இருமுறையும் தேர்வு எழுத வேண்டும் என்பது கட்டாயம் அல்ல. இது, அவர்களின் விருப்பத்தை பொறுத்தது.
ராஜஸ்தான் மாநிலம் கோடாவில் இந்த ஆண்டு 23 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சி அளிக்கிறது. எந்த உயிரும் போகக்கூடாது. அவர்கள் நம் குழந்தைகள். மாணவர்களின் மனஅழுத்தத்தை குறைப்பது நமது கூட்டு பொறுப்பு. பள்ளிக்கூடம் போலவே பயிற்சி மையங்களை நடத்துகிறார்கள். மொத்த மாணவர்களுடன் ஒப்பிடுகையில், தற்கொலை செய்து கொண்டவர்கள் எண்ணிக்கை குறைவுதான்.
பயிற்சி மையம் தேவையில்லை
இருப்பினும், இதை அலட்சியப்படுத்த முடியாது. இந்த 'போலி பள்ளிகள்' குறித்து ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. மாணவர்களுக்கு பயிற்சி மையமே செல்ல தேவையில்லாத கல்வியை அளிப்பதுதான் மத்திய அரசின் நோக்கம்.
நவோதயா பள்ளி மாணவர்கள், எந்த பயிற்சி மையங்களுக்கும் செல்லாமல், போட்டி தேர்வுகளில் சிறப்பாக செயல்படுகின்றனர். பள்ளிக்கல்வியே போதுமானது என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும்.
சென்னை ஐ.ஐ.டி.
டெல்லி, சென்னை ஐ.ஐ.டி.கள், வெளிநாடுகளில் தங்கள் வளாகங்களை அமைக்க உள்ளன. எந்தெந்த நாடுகளுக்கு விருப்பம் உள்ளதோ, அந்த நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அதுபோல், இந்தியாவில் வளாகங்களை அமைக்க விரும்பும் வெளிநாட்டு கல்வி நிறுவனங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டு வருகின்றன.
மேற்கு வங்காளம், கர்நாடகா போன்ற மாநிலங்கள், புதிய கல்வி கொள்கையை எதிர்ப்பது அரசியல்ரீதியானது. கல்விரீதியானது அல்ல.
இவ்வாறு அவர் கூறினார்.