தீர்ப்பை நிறுத்திவைக்க கோரி மேல்முறையீடு: ராகுல் காந்தியின் விளக்க மனுவில் கூறப்பட்டுள்ளது என்ன?
|அவதூறு வழக்கில் விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனை தீர்ப்பை நிறுத்திவைக்க கோரும் தனது மேல்முறையீட்டு மனு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் ராகுல் காந்தி விளக்க மனுவை தாக்கல் செய்துள்ளார்.
புதுடெல்லி,
அவதூறு வழக்கில் குற்றவாளி என்ற சூரத் கோர்ட்டு தீர்ப்பை நிறுத்திவைக்க கோரும் ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.கே.மிஸ்ரா ஆகியோர் தலைமையிலான அமர்வு கடந்த 21-ந் தேதி விசாரித்தது.
ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனுவுக்கு பதில் அளிக்க குஜராத் அரசுக்கும், புர்னேஷ் மோடிக்கும் உத்தரவிட்டு, விசாரணையை ஆகஸ்டு 4-ந் தேதிக்கு தள்ளிவைத்தது.
புர்னேஷ் மோடி பதில் மனு
இந்த நிலையில் புர்னேஷ் மோடி சார்பில் கடந்த 31-ந் தேதி தாக்கல் செய்த பதில் மனுவில், ஒரு சமூகத்தின் உணர்வுகளை புரிந்துகொள்ளாத, ஆணவம் குணம் கொண்ட ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்திவைக்காமல் அவரது மேல்முறையீட்டு மனுவை எச்சரிக்கும் வகையில் அபராதத்துடன் தள்ளுபடி செய்து உத்தரவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
ராகுல் காந்தியின் விளக்க மனு
இந்நிலையில் இந்த பதில் மனுவுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் ராகுல் காந்தி சார்பில் வக்கீல் எஸ்.பிரசன்னா மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததை அபூர்வமானதாக கருத வேண்டும். நீரவ் மோடி, லலித் மோடி போன்ற குலப் பெயர்கள் ஒரே சமூகத்தை குறிப்பதில்லை. ராகுல் காந்திக்கு எதிராக நிலுவையில் உள்ள வழக்குகளில் தண்டனை தீர்ப்பு அளிக்கவில்லை.
நிறுத்திவைக்க வேண்டும்
ராகுல் காந்தி மன்னிப்பு கோர மறுத்ததன் காரணமாக அவரை ஆணவக்காரர் என பதில்மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. ராகுல் காந்தி எவ்வித குற்றத்தையும் செய்யவில்லை. எனவே அவருக்கு அளித்த தண்டனையை ஏற்றுக்கொள்ள முடியாது. மன்னிப்பு கோர வேண்டும் என்றால் அவர் எப்போதோ கோரி இருப்பார். தண்டனை தீர்ப்பை நிறுத்திவைப்பதால் புர்னேஷ் மோடிக்கு ஏற்படப்போகும் பாதிப்பு குறித்து பதில் மனுவில் தெளிவாக இல்லை. எனவே தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்கும் வகையிலும், எதிர்வரும் கூட்டத்தொடரில் பங்கேற்கும் வகையிலும் மேல்முறையீடு மனு விசாரித்து முடிக்கும் வரை ராகுல்காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனை தீர்ப்பை நிறுத்தி வைக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.