கெஜ்ரிவாலுக்கு சிறையில் எதுவும் நடக்கலாம்... பின்னணியில் கடுமையான சதி உள்ளது - ஆம் ஆத்மி எம்.பி. எச்சரிக்கை
|சிறையில் கெஜ்ரிவாலுக்கு எதுவும் நடக்கலாம். அவருக்கு எதிராக கடுமையான சதி உள்ளது என்று ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் கூறியுள்ளார்.
புதுடெல்லி,
டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முதல்-மந்திரி கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு உள்ளார். திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரை சிறையிலேயே கொலை செய்ய சதி நடப்பதாக ஆம் ஆத்மி நேற்று முன்தினம் குற்றம் சாட்டியிருந்தது. குறிப்பாக வீட்டில் சமைத்த உணவு, இன்சுலின் போன்றவை அவருக்கு மறுக்கப்பட்டு உள்ளதாக டெல்லி மந்திரி அதிஷி குற்றம் சாட்டினார்.
இதை கட்சியின் எம்.பி. சஞ்சய் சிங்கும் நேற்று உறுதிப்படுத்தினார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'பா.ஜனதாவின் நடவடிக்கை ஒருவரை கொல்லும் நிலைக்குக்கூட தள்ளப்படலாம். எனவே சிறையில் கெஜ்ரிவாலுக்கு எதுவும் நடக்கலாம். அவருக்கு எதிராக கடுமையான சதி உள்ளது' என தெரிவித்தார். ஆனாலும் இந்த நடவடிக்கைகளால் கெஜ்ரிவால் உடைந்து போகவோ, தலை வணங்கவோ மாட்டார் என்றும் அவர் உறுதிபட கூறினார்.