< Back
தேசிய செய்திகள்
காங்கிரசுக்கு செலுத்தும் வாக்குகள் பிஆர்எஸ் கட்சிக்கு தான் போகும் - தெலுங்கானா பிரச்சார கூட்டத்தில் அமித்ஷா பேச்சு
தேசிய செய்திகள்

காங்கிரசுக்கு செலுத்தும் வாக்குகள் பிஆர்எஸ் கட்சிக்கு தான் போகும் - தெலுங்கானா பிரச்சார கூட்டத்தில் அமித்ஷா பேச்சு

தினத்தந்தி
|
28 Nov 2023 1:17 AM IST

தெலுங்கானாவில் இன்று பிரசாரம் ஓய்கிறது. இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

கரீம்நகர் (தெலுங்கானா),

சட்டசபை தேர்தல் நடந்து வரும் 5 மாநிலங்களில் கடைசி மாநிலமாக, தெலுங்கானாவில் வருகிற 30-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. ஆட்சியை பிடிக்க பாரதிய ராஷ்டிர சமிதி, காங்கிரஸ், பா.ஜனதா தீவிரமாக உழைத்து வருகின்றன.

இதனால் மாநிலத்தில் மும்முனை போட்டி ஏற்பட்டு இருக்கிறது. இதற்கிடையே தெலுங்கானாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது. எனவே தலைவர்கள் அனைவரும் இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

பிரதமர் மோடி நேற்று கரிம்நகரில் நடந்த பிரசார கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது ஆளும் சந்திரசேகர் ராவ் அரசையும், காங்கிரஸ் கட்சியையும் கடுமையாக சாடினார். ஹுசுராபாத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டு பேசினார்.

அப்போது பேசிய அவர், "பாரத ராஷ்டிர சமிதிக்கும் (பிஆர்எஸ்) காங்கிரசுக்கும் 'ரகசிய புரிந்துணர்வு' இருக்கிறது. தெலுங்கானா மக்களவை சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு வாக்களிக்க வேண்டும். எங்கள் வேட்பாளர் எட்டல ராஜேந்தருக்கு மிகப்பெரிய பெரும்பான்மையை வழங்குங்கள், இதன் மூலம் சந்திரசேகர் ராவுக்கு தெளிவான செய்தியை அனுப்ப முடியும். அடுத்த தேர்தலில் பிஆர்எஸ் வேட்பாளர்கள் வெற்றி பெறக்கூடாது.

தெலுங்கானாவில் மூன்றாவது முறையாக கே.சி.ஆரை முதல்-மந்திரியாக காங்கிரஸ் ஆதரிக்கும், ராகுல் காந்தி பிரதமராக வருவதற்கு கே.சி.ஆர் ஆதரவு அளிக்கும். ஆனால் அந்த பதவி காலியாக இல்லை. காங்கிரஸ், பிஆர்எஸ் மற்றும் எம்ஐஎம் ஆகிய மூன்று கட்சிகளும் குடும்ப கட்சிகள் மற்றும் ஊழல் மற்றும் குடும்ப ஆட்சிக்கு உறுதியளிக்கும் கட்சிகள்" என்று அவர் சாடினார்.

இதேபோல ஐதராபாத் அருகே போங்கிர் பகுதியில் நடந்த பிரசார கூட்டம் ஒன்றில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரியங்கா பிரசாரம் மேற்கொண்டார். இந்த தலைவர்கள் மட்டுமின்றி மேலும் பல்வேறு தலைவர்களும் மாநிலம் முழுவதும் இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்