சுதந்திர போரில் அறியப்படாத வீரர்கள் பற்றிய அனிமேஷன் பட டிரெய்லர் - அனுராக்சிங் தாக்குர் வெளியிட்டார்
|சுதந்திர போரில் அறியப்படாத வீரர்கள் பற்றிய அனிமேஷன் பட டிரெய்லரை மத்திய மந்திரி அனுராக்சிங் தாக்குர் வெளியிட்டார்.
புதுடெல்லி,
மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகமும், 'கிராபிட்டி ஸ்டுடியோஸ்' நிறுவனமும் இணைந்து தயாரித்த 2 சீசன்களை கொண்ட அனிமேஷன் தொடரான "கே.டி.பி. பாரத் ஹைன் ஹம்" என்கிற டிரெய்லரை மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை மந்திரி அனுராக்சிங் தாக்குர் வெளியிட்டார்.
இந்த தொடர் 52 எபிசோடுகளை கொண்டதாக இருக்கும். 1500-ம் ஆண்டு முதல் 1947 வரையிலான இந்திய சுதந்திர போராட்டத்தின் கதைகள் மற்றும் அறியப்படாத வீரர்களின் கதையும் இருக்கும். கிரிஷ், திரிஷ் மற்றும் பால்டி பாய் ஆகிய அனிமேஷன் கதாபாத்திரங்கள் கதைகளை எடுத்துச்சொல்லும் விதமாக இது அமைந்துள்ளது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், கடந்த கால கல்வி முறையால் மறக்கப்பட்ட பங்களிப்பாளர்கள் குறித்து இளைஞர்களுக்கு கல்வி கற்பிக்கும் முயற்சியே இந்த தொடர் என்றும், பல மொழிகளில் இது வெளியாவதால் மொழித்தடையைத் தாண்டி உலகம் முழுவதும் செல்லும் என்றும் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் தகவல் ஒலிபரப்புத்துறை செயலாளர் அபூர்வ சந்திரா உள்பட பலர் கலந்து கொண்டனர். மேற்கண்ட படம் தமிழ், இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட 12 மொழிகளில் வெளியாக உள்ளது. முதல் சீசன் வருகிற 15-ந் தேதியும், 2-வது சீசன் ஜனவரி 28-ந் தேதியும் தொடங்குகிறது. தூர்தர்ஷன், நெட்பிளிக்ஸ் மற்றும் அமேசான் தளங்களிலும் இதை காணலாம்.