< Back
தேசிய செய்திகள்
ஏழைகளுக்கு எதிரான, இரக்கமற்ற மத்திய அரசு:  கர்நாடக முதல்-மந்திரி பரபரப்பு குற்றச்சாட்டு
தேசிய செய்திகள்

ஏழைகளுக்கு எதிரான, இரக்கமற்ற மத்திய அரசு: கர்நாடக முதல்-மந்திரி பரபரப்பு குற்றச்சாட்டு

தினத்தந்தி
|
7 Sept 2023 2:58 PM IST

அன்ன பாக்கிய திட்டத்திற்கு பணம் கொடுத்து அரிசி வாங்க முயன்றும் மத்திய அரசு அரிசி கொடுக்க மறுத்து விட்டது என கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா குற்றச்சாட்டாக கூறியுள்ளார்.

துமகூரு,

கர்நாடகாவின் துமகூரு மாவட்டத்தில் மதுகிரி என்ற இடத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், முதல்-மந்திரி சித்தராமையா கலந்து கொண்டு இன்று பேசினார்.

இந்நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, இதற்கு முன்பு இருந்த அரசு இலவச அரிசியை 5 கிலோவாக குறைத்தது. ஆனால், நான் தேர்தலுக்கு முன்னர் கூறும்போது, 5 கிலோவுக்கு கூடுதலாக நான் மக்களுக்கு அரிசியை வழங்குவேன் மற்றும் நீங்கள் என்ன பெறுகின்றீர்களோ அதனை விட கூடுதலாகவே நான் வழங்குவேன் என கூறியிருந்தேன்.

அன்ன பாக்கிய திட்டத்திற்காக, இந்திய உணவு கழகத்திடம் நாங்கள் கடிதம் எழுதி இருந்தோம். அரிசியை அவர்களிடம் இருந்து கொள்முதல் செய்ய இருந்தோம். அவர்களும் அரிசியை வழங்க தயாராக இருக்கிறோம் என உறுதி அளித்து இருந்தனர்.

ஆனால், எங்களுக்கு அரிசி வழங்க மத்திய அரசு மறுத்து விட்டது. பா.ஜ.க. ஏழைகளுக்கு ஆதரவானவர்களா? இல்லை. அவர்கள் ஏழைகளுக்கு ஆதரவானவர்கள் இல்லை. நாங்கள் அரிசியை இலவசத்திற்கு கேட்கவில்லை.

ஒரு கிலோவுக்கு ரூ.36 வரை பணம் கொடுக்க நாங்கள் தயாராகவே இருந்தோம். அதனால், அவர்கள் எவ்வளவு கேடானவர்கள் என நீங்களே முடிவு செய்ய வேண்டும். அவர்கள் ஏழைகளுக்கு எதிரானவர்கள். அவர்கள் இரக்கமற்றவர்களாக உள்ளனர் என குற்றச்சாட்டாக கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்