கள்ளக்காதலுக்கு எதிர்ப்பு: மனைவியை கொன்று உடலை பெட்ரோல் ஊற்றி எரித்த கணவர்
|கள்ளக்காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் பெண்ணை கொன்று உடலை பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டு நாடகமாடிய அவரது கணவரை போலீசார் கைது செய்தனர்.
பெங்களூரு,
பெங்களூரு புறநகர் மாவட்டம் தொட்டபள்ளாப்புராவை சேர்ந்தவர் ரவி. தொழிலாளி. இவரது மனைவி 19 வயதான வீணா. இவர் அந்த பகுதியில் உள்ள ஆயத்த ஆடை ஆலை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் கடந்த மாதம் 22-ந் தேதி வேலைக்கு சென்ற வீணா, வீடு திரும்பவில்லை. இதுகுறித்து ரவி தொட்டபள்ளாப்புரா புறநகர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் தொட்டபள்ளாப்புரா புறநகர் பகுதியில் உள்ள நரசிம்மனஹள்ளி வனப்பகுதியில் பெண் ஒருவர் எரிந்த நிலையில் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். மேலும் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், மாயமானதாக தேடப்பட்டு வந்த வீணா என்பது தெரியவந்தது. உறவினர்களும் அதனை உறுதி செய்தனர்.
இதையடுத்து போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இதுதொடர்பாக வீணாவின் கணவர் ரவி, அவரது குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, ரவியின் நடவடிக்கையில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.
அப்போது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதாவது ரவிக்கும், அவரது பக்கத்து வீட்டில் வசித்து வந்த பெண்ணுக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். இதுகுறித்து ரவியின் மனைவி வீணாவுக்கு தெரியவந்தது. உடனே அவர் தனது கணவரை கண்டித்துள்ளார். எனினும் அவர் கள்ளத்தொடர்பை கைவிடாமல் இருந்துள்ளார்.
இதனால் தம்பதி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இதையடுத்து தனது மனைவியை கொலை செய்ய ரவி முடிவு செய்துள்ளார். அதன்படி கடந்த 22-ந் தேதி வேலைக்கு சென்ற மனைவியை அழைத்து வருவதற்காக ரவி சென்றார். அப்போது அவர் தனது மனைவியை அழைத்து கொண்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.
வனப்பகுதி அருகே வந்தவுடன் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து தனது மனைவியை ரவி அடித்து தாக்கி உள்ளார். இதில் வீணா நிலைகுலைந்து கீழே விழுந்து உயிரிழந்தார். இதையடுத்து பெட்ரோல் ஊற்றி வீணா உடலுக்கு ரவி தீவைத்துள்ளார். பின்னர் ஒன்றும் நடக்காதது போல் வீட்டிற்கு வந்துள்ளார்.
மேலும் மனைவியை காணவில்லை என நாடகமாடியதுடன் போலீசிலும் புகார் அளித்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ரவியை கைது செய்தனர். பின்னர் அவரிடம் இதுபற்றி தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.