ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் மேலும் ஒரு மாணவர் தற்கொலை
|அந்த மாணவர் கடந்த ஆண்டு முதல் முயற்சியில் தோல்வியடைந்த நிலையில், கோட்டாவில் உள்ள ஒரு பயிற்சி மையத்தில் சேர்ந்திருந்தார்.
கோட்டா,
நாட்டில் 'நீட்', 'ஜே.இ.இ.' தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கும் மையமாக ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரம் உள்ளது. ஆனால் இங்கு மனஅழுத்தம் போன்ற பிரச்சினைகளால் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. கடந்த மாதம் மட்டும் 4 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் கோட்டாவில் மேலும் ஒரு தற்கொலை சோகம் நடந்திருக்கிறது. ஒரு 17 வயது மாணவர், தான் தங்கியிருந்த விடுதி அறை மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
அவர் 'ஜே.இ.இ.' பிரதான தேர்வுக்காக தயாராகி வந்தார். அந்த மாணவர் கடந்த ஆண்டு முதல் முயற்சியில் தோல்வியடைந்த நிலையில், கோட்டாவில் உள்ள ஒரு பயிற்சி மையத்தில் சேர்ந்திருந்தார். ஆனால் அவர் கடந்த ஒரு மாத காலமாக வகுப்புக்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது.
அம்மாணவர் தற்கொலை கடிதம் எதுவும் எழுதியிருக்கவில்லை. எனவே அவர் இந்த முடிவை எடுத்ததற்கான காரணம் தெரியவில்லை. அதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.