குஜராத்துக்கு அடுத்து மற்றொரு ஷாக்... மராட்டியத்தில் 3 மாதங்களில் 18-25 வயதுடைய 5,610 இளம்பெண்கள் மாயம்
|மராட்டியத்தில் மார்ச் மாதத்தில் 18 முதல் 25 வயதுடைய 2,200 இளம்பெண்கள் காணாமல் போன அதிர்ச்சி சம்பவம் தெரிய வந்து உள்ளது.
புனே,
நாட்டில் ஆயுத கடத்தல், போதை பொருள் கடத்தல், கொள்ளை சம்பவங்களுக்கு ஈடாக ஆள்கடத்தல் சம்பவமும் அதிகரித்து காணப்படுகிறது. அதிலும், பருவ வயது கொண்ட இளம்பெண்கள் கடத்தல் மற்றும் மாயம் ஆகியவை அந்த குடும்பத்திற்கு மட்டுமின்றி சமூகத்திற்கும் பேரதிர்ச்சி ஏற்படுத்துகிறது.
இந்த நிலையில், மராட்டியத்தில் கடந்த மார்ச் மாதத்தில் 18 முதல் 25 வயதுடைய 2,200 இளம்பெண்கள் காணாமல் போன அதிர்ச்சி சம்பவம் தெரிய வந்து உள்ளது. இதன்படி, தினசரி 70 இளம்பெண்கள் காணாமல் போயுள்ளனர்.
இந்த எண்ணிக்கை பிப்ரவரி மாதத்தில் 1,810 ஆக உள்ளது. மார்ச் மாதத்தில் முந்தின மாதத்துடன் ஒப்பிடும்போது, இந்த எண்ணிக்கை 390 அதிகரித்து உள்ளது.
அதிலும், மைனர் சிறுமி என்றால், காணாமல் போனவர்கள் என்ற பிரிவில் போலீசார் புகார் பதிவு செய்கின்றனர். சிறுமிகள் என்பதனால், அவர்களின் அடையாளங்களை வெளியிட முடியாது. அதனால், அந்த விவரங்களை போலீசார் வலைதளத்தில் பதிவேற்றவில்லை. இந்த விவரங்களில், கடத்தப்பட்ட சிறுமிகளின் விவரங்களும் சேர்க்கப்படவில்லை.
இதனால், கணக்கில் வந்த எண்ணிக்கையை விட காணாமல் போன மொத்த சிறுமிகள் மற்றும் இளம்பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கும் என்று தகவல் கூறுகிறது.
இது உண்மையில் எச்சரிக்கை அளிக்கும் விசயம். போலீசின் காணாமல் போனவர்கள் பற்றிய பிரிவு, இதற்கான காரணங்களை கண்டறிய வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளது என மராட்டிய மகளிர் ஆணைய தலைவர் ரூபாலி சகாங்கர் கூறியுள்ளார்.
மராட்டியத்தில் உள்ள இளம்பெண்களில், நடப்பு 2023-ம் ஆண்டில் கடந்த ஜனவரியில் 1600 பேர், பிப்ரவரியில் 1810 பேர், மார்ச்சில் 2200 பேர் காணாமல் போயுள்ளனர். நகரங்களை விட கிராம பகுதிகளில் இந்த விகிதம் அதிகரித்து உள்ளது.
கடந்த மார்ச்சில், புனே 228, நாசிக் 161, கோலாப்பூரில் 114, தானே 133, அகமதுநனார் 101, ஜல்கான் 81, சாங்லி 82, மற்றும் யவத்மால் 74 ஆகிய மாவட்டங்களில் இது அதிக எண்ணிக்கையில் உள்ளது. குறைந்த எண்ணிக்கையாக ஹிங்கோலி 3, சிந்துதுர்க் 3, ரத்னகிரி 12, நந்தூர்பார் 14 மற்றும் பண்டாரா 16 ஆகிய மாவட்டங்கள் உள்ளன.
பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் கடத்தப்பட்டு பாலியல் தொழிலுக்காக விற்பனை செய்யப்பட்டு உள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியான நிலையில், மற்றொரு அதிர்ச்சி தகவல் வெளிவந்து உள்ளது.