நடிகர் சல்மான் கான் வீடு மீது துப்பாக்கியால் சுட்ட வழக்கில் மேலும் ஒருவர் சிக்கினார்
|நடிகர் சல்மான்கான் வீடு மீது துப்பாக்கியால் சுட்ட வழக்கில் மேலும் ஒருவர் அரியானா மாநிலத்தில் சிக்கினார்.
மும்பை,
மும்பை பாந்திராவில் உள்ள நடிகர் சல்மான்கான் வீட்டின் மீது துப்பாக்கியால் சுட்ட விக்கி குப்தா (வயது24), சாகர் பால் (21), ஆகிய 2 பேரை குஜராத் மாநிலத்தில் கடந்த 16-ந்தேதி போலீசுார் கைது செய்தனர். மேலும் சல்மான் வீட்டின் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு துப்பாக்கி, தோட்டாக்களை வழங்கியதாக சோனு குமார், அனுஜ் தபான் ஆகிய 2 பேரை பஞ்சாப்பில் கைது செய்தனர்.
பின்னர் 2 பேரை போலீசுார் மும்பை சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். இதில் அனுஜ் தபான் போலீசார் காவலில் எடுத்த விசாரித்த போது கடந்த 1-ந்தேதி போலீஸ் லாக்அப்பில் உள்ள கழிவறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். வழக்கில் தொடர்புடைய 5-வது நபரான முகமது ரபீக் சவுத்ரி ராஜஸ்தானில் கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் விசாரிக்கப்பட்டு வருகிறார்.
இந்த நிலையில் சல்மான் வீடு துப்பாக்கி சூடு வழக்கு தொடர்பாக மேற்கொண்டு நடத்திய விசாரணையில் மற்றொருவருக்கு தொடர்பு இருப்பதாக தெரியவந்தது. இதனை தொடர்ந்து மும்பை குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தியதி்ல அரியானா மாநிலம் பதேபாத்தில் பதுங்கி இருந்த ஹர்பால் சிங் (வயது37) என்பவர் என தெரியவந்தது.
இதனை தொடர்ந்து தனிப்படை போலீசார் அங்கு சென்று அவரை கைது செய்தனர். இவரை மும்பை அழைத்து வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். நடிகர் சல்மான் கான் வீடு மீது துப்பாக்கியால் சுட்ட வழக்கில் கைது எண்ணிக்கை 6-ஆக உயர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.