மணிப்பூர் கலவரம்: மேலும் ஒரு பெண் கூட்டு பலாத்காரம்
|மணிப்பூரில் மேலும் ஒரு பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இம்பால்,
கலவர பூமியாகியிருக்கும் மணிப்பூரில் குகி பழங்குடி இனத்தை சேர்ந்த 2 பெண்களை ஒரு கும்பல் நிர்வாணப்படுத்தி மானபங்கம் செய்தபடி ஊர்வலமாக அழைத்து சென்ற சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கடந்த மே மாதம் 4-ந்தேதி நடந்த இந்த கொடூர சம்பவத்தின் வீடியோ கடந்த மாதம் 19-ந்தேதி சமூக வலைத்தளங்களில் வெளியான பிறகே வெளிச்சத்துக்கு வந்தது.
இந்த நிலையில் மணிப்பூரில் மேலும் ஒரு பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கடந்த மே மாதம் 3-ந்தேதி நடந்த கலவரத்தின்போது சூரச்சந்த்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த திருமணமான 37 வயது பெண்ணை ஒரு கும்பல் கூட்டு பலாத்காரம் செய்தனர். பாதிக்கப்பட்ட அந்த பெண் போலீசில் புகார் அளித்ததன் மூலம் அவருக்கு நேர்ந்த கொடூரம் வெளியுலகத்துக்கு தெரியவந்துள்ளது.
அந்த புகாரில் கூறப்பட்டுள்ளதாவது:-
கடந்த மே 3-ந்தேதி கலவரம் வெடித்த நாளில் எங்கள் வீடு அமைந்த பகுதியில் இருந்த பல வீடுகளும் தீக்கிரையாக்கப்பட்டன. கலவரக்காரர்கள் கூட்டம் கூட்டமாக வருவதைப் பார்த்த நாங்கள் அச்சத்தில் அவசர அவசரமாக வீட்டைவிட்டு வெளியேறினோம். நான் என் இரு மகன்கள், எனது சகோதரரின் மகள், எனது மைத்துனி ஆகியோருடன் வீட்டிலிருந்து வெளியேறினேன், நாங்கள் வேகமாக ஓட்டமெடுத்தோம். எனக்கு முன்னால் என் மைத்துனி ஓடிக் கொண்டிருந்தார். நான் வேகமாக ஓடும்போது திடீரென கால் இடரி கீழே விழுந்துவிட்டேன். உடனே என் மைத்துனி எனை நோக்கி வந்தார். நான் அவரிடம் குழந்தைகளை ஒப்படைத்துவிட்டு ஓடும்படி அறிவுறுத்தினேன். அவரும் ஓடிவிட்டார். நான் மேலே எழுந்தபோது என்னை 6 பேர் சுற்றி வளைத்தனர். என்னை மிகவும் தரக்குறைவாக விமர்சித்தனர். பின்னர் அந்த 6 ஆண்களும் என்னை கூட்டு பலாத்காரம் செய்தனர். நான் எனது குடும்பத்தின் நலன் கருதி இதனை வெளியில் சொல்லாமல் இருந்தேன். ஆனால், இப்போது பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களுக்கு நீதி வேண்டி குரல் கொடுத்துவரும் சூழலில் நான் துணிந்து புகார் கொடுத்துள்ளேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.