லக்கிம்பூர் கேரியில் மற்றொரு சம்பவம்: சிறுமி பலாத்காரம், அடித்து கொலை
|உத்தர பிரதேசத்தில் 2 மைனர் சகோதரிகள் பலாத்காரத்திற்கு பின் கொடூர முறையில் கொல்லப்பட்ட அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் மற்றொரு சிறுமி அடித்து கொல்லப்பட்டு உள்ளார்.
லக்கீம்பூர் கேரி,
உத்தர பிரதேசத்தின் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில், பீரா காவல் நிலையத்திற்கு உட்பட்ட முசிப்பூர் பகுதியில் தனது வீட்டின் முன்பு சிறுமி ஒருவர் அமர்ந்து இருந்து உள்ளார். அதே கிராமத்தில் வசித்து வந்த, சலீமுதீன் மற்றும் ஆசிப் ஆகிய இருவரும் அந்த வழியே சென்றனர்.
அவர்கள் இருவரும் சிறுமியை அடித்து, தாக்கியுள்ளனர் என கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் பலத்த காயமடைந்த சிறுமி பிஜுவா பகுதியில் உள்ள சமூக சுகாதார மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்து விட்டார்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேல்குறிப்பிட்ட 2 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி தரப்பில் முன்பே புகார் அளிக்கப்பட்டு உள்ளது. எனினும், அதில் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமுடன் இருந்ததற்காக காவல் அதிகாரி சுனில் என்பவர் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளார் என போலீஸ் சுப்பிரெண்டு சஞ்சீவ் சுமன் தெரிவித்து உள்ளார்.
குடும்பத்தினர் மற்றும் சிறுமி சிகிச்சையின்போது அளித்த வாக்குமூலம் வீடியோ பதிவு செய்யப்பட்டது. அந்த இருவர் மீதும் சிறுமியின் குடும்பத்தினர் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டும் தெரிவித்து உள்ளனர். இதுபற்றி தேவையான விசாரணை நடைபெறும் என எஸ்.பி. சஞ்சீவ் கூறியுள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெரி மாவட்டத்தில் லால்பூர் மஜ்ரா தமோலி பூர்வா கிராமத்தில், கடந்த 14-ந்தேதி இரண்டு தலித் சிறுமிகளின் உடல்கள் ஒரு மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டன.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு நீதி கோரி கிராம மக்கள் மற்றும் சிறுமிகளின் குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிறுமிகள் கொலை வழக்கில், மூன்று பேர் அந்த சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததாக குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதுபற்றி செய்தியாளர்களை சந்தித்த போலீஸ் சூப்பிரண்டு சஞ்சீவ் சுமன், இந்த கொலை வழக்கு தொடர்பாக சுஹேல், ஜூனைது, ஹபிசுல் ரகுமான், கரிமுதீன் மற்றும் ஆரிப் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்துனர். இதில் 6வதாக கைது செய்யப்பட்ட சோட்டு என்பவர் அந்த சிறுமியின் பக்கத்து வீட்டை சேர்ந்த நபர் தான் மற்றவர்களிடம் அந்த சகோதரிகளை அறிமுகப்படுத்தியுள்ளார்.
போலீசார் அவரையும் கைது செய்துள்ளனர். இந்த இரு சிறுமிகளையும் பக்கத்தில் உள்ள கரும்பு தோட்டத்தில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக அவர் கூறினார்.
லக்கிம்பூர் கெரி பகுதியில் 2 தலித் சிறுமிகள் பலாத்காரத்திற்கு பின் மரத்தில் தொங்க விடப்பட்டு உடல்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தின் அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் அதே மாவட்டத்தில், மற்றொரு சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டதுடன், அடித்து கொல்லப்பட்டு உள்ளது பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.