< Back
தேசிய செய்திகள்
மணிப்பூரில் மீண்டும் துப்பாக்கிச் சண்டை - ஒருவர் படுகாயம்
தேசிய செய்திகள்

மணிப்பூரில் மீண்டும் துப்பாக்கிச் சண்டை - ஒருவர் படுகாயம்

தினத்தந்தி
|
12 April 2024 5:04 PM IST

ஹெய்ரோக் கிராமத்திற்குள் இன்று காலை துப்பாக்கி ஏந்திய நபர்கள் சிலர் புகுந்து தாக்குதல் நடத்தத் தொடங்கினர்.

இம்பால்,

மணிப்பூரில் குக்கி - மெய்தி சமூகங்களுக்கு இடையே இன ரீதியிலான மோதல் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் தொடங்கிய இந்த மோதல் பல மாதங்களாக நீடித்து வருகிறது. அங்கு நடைபெற்ற வன்முறை சம்பவங்களில் இதுவரை நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில், ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை இழந்து முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

அதேவேளை, வன்முறை மற்றும் மோதலை தடுக்க மணிப்பூரில் மத்திய படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அங்கு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும், குக்கி மற்றும் மெய்தி சமூகங்களில் உள்ள ஆயுதக்குழுக்கள் தொடர்ந்து தாக்குதல், வன்முறை சம்பவங்களை அரங்கேற்றி வருகின்றன.

இந்த நிலையில் மணிப்பூரின் தவுபால் மாவட்டத்தில் உள்ள ஹெய்ரோக் கிராமத்திற்குள் இன்று காலை துப்பாக்கி ஏந்திய நபர்கள் சிலர் புகுந்து தாக்குதல் நடத்தத் தொடங்கினர். இதையடுத்து அந்த கிராமத்தைச் சேர்ந்த ஆயுதக்குழுவினர் பதில் தாக்குதல் நடத்தினர்.

இருதரப்பினருக்கும் இடையே சுமார் ஒரு மணி நேரம் துப்பாக்கிச் சண்டை நீடித்தது. இந்த தாக்குதலில் நிங்தவுஜாம் ஜேம்ஸ் சிங் என்ற நபர் படுகாயமடைந்தார். இதனிடையே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மத்திய, மாநில போலீஸ் படையினர், படுகாயமடைந்த நபரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்