'வீட்டு வாசலுக்கே பள்ளி' திட்டத்தில் மேலும் ஒரு கல்வி சேவை பஸ்; பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனர் தொடங்கி வைத்தார்
|‘வீட்டு வாசலுக்கே பள்ளி’ திட்டத்தில் மேலும் ஒரு கல்வி சேவை பஸ்சை பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனர் தொடங்கி வைத்தார்.
பெங்களூரு:
பஸ் கல்வி சேவை
கர்நாடக அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை, பெங்களூரு மாநகராட்சி சார்பில் அங்கன்வாடி குழந்தைகளுக்கு தரமான கல்வி வழங்கும் நோக்கத்தில் 'வன்டர் ஆன் வீல்' (வீட்டு வாசலுக்கே பள்ளி) என்ற திட்டம் கடந்த மே மாதம் தொடங்கப்பட்டது. அந்த திட்டத்தின் ஒரு பகுதியாக நேற்று மேலும் ஒரு புதிய கல்வி சேவை பஸ் தொடக்க விழா பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் கலந்து கொண்டு அந்த திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இந்த திட்டத்தின்படி பெங்களூருவில் 10 மண்டலங்களுக்கு தலா ஒரு பஸ் வழங்கப்பட்டுள்ளது. அந்த பஸ் தினமும் தங்களுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு செல்லும். அங்கு பள்ளிக்கு செல்லாத குழந்தைகளை அந்த பஸ்களுக்குள் வரவழைத்து கல்வி கற்பிக்கப்படும். முதல்கட்டமாக தெற்கு மண்டலத்தில் ஒரு பஸ்சின் கல்வி சேவை தொடங்கி வைக்கப்பட்டது. தற்போது 10 பஸ்கள் மூலம் கல்வி சேவை வழங்கப்பட்டு வருகிறது.
தேவையான உபகரணங்கள்
இந்த பஸ்களில் 'மான்டசரி' முறையில் கல்வி கற்பிக்கப்படுகிறது. அதற்கேற்ப ஆசிரியர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. பெங்களூருவில் குடிசை வாழ் பகுதிகளில் 6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு கல்வி கற்பிப்பது தான் இதன் நோக்கம் ஆகும். அந்த பஸ்களில் குழந்தைகள் உட்கார வசதி செய்யப்பட்டுள்ளது. ஆசிரியர் கல்வி கற்பிக்க தேவையான உபகரணங்கள் மற்றும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.வரும் நாட்களில் இந்த திட்டத்தை மேலும் பல பகுதிகளுக்கு விஸ்தரிக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. அந்த பஸ்சில் 2 ஆசிரியர்கள், ஒரு டி பிரிவு ஊழியர், வெள்ளை பலகை, குழந்தைகளை ஈர்க்கும் பொம்மைகள் மற்றும் படங்கள், குடிநீர் உள்ளிட்ட வசதிகள் இடம் பெற்றுள்ளன.
இந்த நிகழ்ச்சியில் பெங்களூரு மாநகராட்சி சிறப்பு கமிஷனர் ராம்பிரசாத் மனோகர் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த திட்டத்தை தொடங்குவதில் தமிழரான ராம்பிரசாத் மனோகர் முக்கிய பங்காற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.