பாலியல் புகாரில், மலையாள நடிகர் ஜெயசூர்யா மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
|பாலியல் புகாரில், மலையாள நடிகர் ஜெயசூர்யா மீது 2-வது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்,
ஹேமா கமிஷன் அறிக்கையால் மலையாள பட உலகில் நடந்த பாலியல் அத்துமீறல்கள் வெளிச்சத்துக்கு வந்து நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனை தொடர்ந்து நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்களுக்கு எதிராக பாலியல் புகார்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. இது மலையாள திரையுலகில் பல்வேறு அதிரடி திருப்பங்களையும், அதிர்வலைகளையும் ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையே பாதிக்கப்பட்ட நடிகைகள் அரசு அமைத்த சிறப்பு விசாரணை குழுவிடம் ரகசியமாக வாக்குமூலம் அளித்து வருகின்றனர். அந்தவகையில், பெண் நடிகை ஒருவர் அளித்த புகாரில் மலையாள நடிகர்கள் ஜெயசூர்யா மற்றும் முகேஷ் மீது வன்கொடுமை வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் மேலும் ஒரு நடிகை, நடிகர் ஜெயசூர்யா மீது பாலியல் புகார் தெரிவித்திருக்கிறார். இந்த புகாரின் பேரில் அவர் மீது 2-வது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவில் வழக்குப் பதியப்பட்டுள்ளதால், நடிகர் ஜெயசூர்யாவுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.