பீகாரில் தொடர்கதையாகும் பாலம் விபத்துகள்: மூன்று வாரத்தில் இடிந்து விழுந்த 13-வது பாலம்
|பாலங்கள் தொடர்ந்து விபத்துக்குள்ளான சம்பவங்களில் 15 பொறியாளர்களை அம்மாநில அரசு சஸ்பெண்ட் செய்துள்ளது.
சஹர்சா,
பீகாரில் நேற்று காலை மீண்டும் ஒரு பாலம் இடிந்து விழுந்துள்ளது. கடந்த 3 வாரங்களில் இடிந்து விழுந்த 13-வது பாலம் இதுவாகும். இந்த பாலம் இடிந்து விழுந்த விபத்தில் யாருக்கும் காயம் அல்லது உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்று மாவட்ட நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மஹிசி மற்றும் நவ்ஹட்டா கிராமங்களை இணைக்கும் இந்த பாலம் இடிந்து விழுந்ததால், அப்பகுதி மக்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகி உள்ளனர். தேசிய நெடுஞ்சாலை 17-ஐ கிராமங்களுடன் இணைக்கும் ஒரே பாலம் இதுவாகும்.
இந்த பாலத்தை 48 மணிநேரத்துக்குள் சரிசெய்து போக்குவரத்தை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக வட்ட அதிகாரி அனில் குமார் தெரிவித்துள்ளார்.
கடந்த 17 நாள்களில் 12 பாலங்கள் இடிந்து விழுந்த விவகாரத்தில் நீர்வளத்துறை மற்றும் ஊரக பணித்துறையை சேர்ந்த 16 பொறியாளர்களை மாநில அரசு பணியிடை நீக்கம் செய்திருந்தது.
முன்னதாக மாநிலத்தில் உள்ள அனைத்து பழைய பாலங்களையும் ஆய்வு செய்து, உடனடியாக சீரமைக்க வேண்டிய பாலங்களை அடையாளம் காணுமாறு முதல்-மந்திரி நிதிஷ்குமார் கடந்த வாரம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.