பீகாரில் மற்றொரு பாலம் இடிந்து விபத்து; ஒரு மாதத்தில் 2-வது சம்பவம்
|பீகாரில் ஒரு மாதத்திற்குள் மற்றொரு பாலம் இடிந்து விபத்து ஏற்பட்டு உள்ளது.
பாட்னா,
பீகாரில் தலைநகர் பாட்னாவில் இருந்து 400 கி.மீ. தொலைவில் உள்ள, கிஷன்கஞ்ச் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் மெச்சி ஆற்றின் மீது கட்டப்பட்டு வரும் பாலத்தில் உள்ள தூண் ஒன்று திடீரென இன்று இடிந்து விழுந்து உள்ளது.
இந்த பாலம் ஆனது கிஷன்கஞ்ச் மற்றும் கதிஹார் பகுதிகளை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டு வந்து உள்ளது. கட்டுமான பணியின்போது, மனித தவறால் தூண் இடிந்து விழுந்து உள்ளது என இந்திய தேசிய நெடுஞ்சாலை கழகத்தின் திட்ட இயக்குநர் அரவிந்த் குமார் கூறியுள்ளார்.
இந்த சம்பவத்தில் ஒருவரும் காயம் அடையவில்லை என கூறியுள்ள அவர், இதுபற்றி விசாரணை நடத்த நிபுணர்கள் அடங்கிய 5 பேர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது என்று கூறியுள்ளார்.
ககாரியா மாவட்டம் மற்றும் பாகல்பூர் பகுதியை இணைக்க கூடிய கட்டுமான பணியில் இருந்த பாலம் ஒன்று, கடந்த 4-ந்தேதி திடீரென இடிந்து விழுந்தது.
ரூ.1,750 கோடி செலவில் அந்த பாலம் கட்டப்பட்டு வந்தது. 2-வது முறையாக இடிந்து விழுந்த அந்த சம்பவத்தில் பாதுகாவலர் ஒருவர் உயிரிழந்து விட்டார். இந்நிலையில், சம்பவம் நடந்து ஒரு மாதத்திற்குள் மற்றொரு பாலம் இடிந்து விழுந்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.