நியூஸ் கிளிக் ஊடக நிறுவனத்திற்கு சீல்: எதிர்க்கட்சிகள் கண்டனம்
|டெல்லியில் தனியார் இணையதள செய்தி ஊடகமான 'நியூஸ் கிளிக்' நிறுவனத்திற்கு சிறப்புப் பிரிவு காவல்துறை சீல் வைத்துள்ளது.
புதுடெல்லி,
டெல்லியில் இணையதள செய்தி நிறுவனமான நியூஸ் கிளிக் அலுவலகத்தில் டெல்லி காவல்துறையினர் இன்று சோதனை மேற்கொண்டனர்.
அலுவலகம் மட்டுமின்றி, அதில் பணிபுரியும் 8 பத்திரிகையாளர்களின் வீடுகள் உள்பட 30 இடங்களில் டெல்லி, நொய்டா, காசியாபாத் பகுதிகளில் சோதனை நடைபெற்றது.
இந்நிலையில் இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி வீட்டிலும் சோதனை நடைபெற்றது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி ஒருவரின் மகன் 'நியூஸ் கிளிக்' ஊடக நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதுடன் யெச்சூரியின் வீட்டில் தங்கியுள்ளதால் இந்த சோதனை நடைபெற்றுள்ளது.
சோதனையில் நிறுவன ஊழியர்களின் லேப்டாப், மொபைல் போன்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
வெளிநாட்டில் இருந்து சட்டவிரோதமாக கடந்த 3 ஆண்டுகளில் 38.05 கோடி பணம் பெற்ற குற்றச்சாட்டில் ஊடக நிறுவனத்தின் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும் அதனடிப்படையிலேயே டெல்லி போலீசார் சோதனை மேற்கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், சீனாவுக்கு ஆதரவாக செய்தி பதிவிட பணம் பெற்றதாகக் கூறி, இன்று மாலை டெல்லியில் உள்ள நியூஸ் கிளிக் ஊடக நிறுவனத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத பணபரிமாற்றச் சட்டத்தின் கீழ் ஊடக நிறுவனம் மீது ஏற்கெனவே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பா.ஜ.க.வின் தலைமையில் உள்ள தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக உருவாகிய இந்தியா எதிர்கட்சிகள் கூட்டணி இந்த சோதனைகளை கடுமையாக விமர்சித்துள்ளது.
அக்கூட்டணி இது குறித்து அறிவித்திருப்பதாவது:
உண்மையை மக்களிடையே விளக்கி சொல்பவர்களுக்கு எதிராக பா.ஜ.க. தொடர்ந்து செயல்படுகிறது. வன்முறையையும் பிரிவினையையும் தூண்டுபவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. தங்களுக்கு வேண்டிய தொழிலதிபர்கள் ஊடகங்களை கைப்பற்ற உதவுவதற்காக, இது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. ஊடகங்கள் பகுப்பாய்வு செய்து புள்ளி விவரங்களோடு அரசின் தவறுகளை வெளியே சொல்வதை இந்த அரசு தடுக்க விரும்புகிறது.
உலக அரங்கில் முதிர்ச்சியடைந்த ஜனநாயகம் என கருதப்பட்டு வந்த இந்தியாவிற்கு, இதன் மூலம் பெரும் பின்னடைவு ஏற்பட போகிறது. பிபிசி, நியூஸ் லாண்ட்ரி, டைனிக் பஜார், பாரத் சமாச்சார் மற்றும் வயர் ஆகிய ஊடகங்கள் குறி வைக்கப்பட்ட வரிசையில் நியூஸ்க்ளிக் சேர்ந்துள்ளது.
இவ்வாறு எதிர்கட்சிகள் கூட்டணி அறிவித்துள்ளது.
இந்த நடவடிக்கைக்கு எதிராகவும், நியூஸ்க்ளிக் பத்திரிக்கைக்கு ஆதரவாகவும் இந்திய பத்திரிக்கையாளர்கள் சங்கமும் கருத்து தெரிவித்திருக்கிறது.