< Back
தேசிய செய்திகள்
அங்கித் திவாரி மீது டெல்லி அமலாக்கத்துறை வழக்குப்பதிவு..!!

கோப்புப்படம்

தேசிய செய்திகள்

அங்கித் திவாரி மீது டெல்லி அமலாக்கத்துறை வழக்குப்பதிவு..!!

தினத்தந்தி
|
27 Dec 2023 2:28 AM IST

லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள அங்கித் திவாரி ரூ.40 லட்சம் லஞ்சம் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சென்னை,

திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரி டாக்டர் சுரேஷ்பாபு சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கினார். இந்த வழக்கில் இருந்து அவரை விடுவிப்பதற்கு மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி ரூ.40 லட்சம் லஞ்சம் வாங்கியதாக திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.

இந்த சூழலில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தியது சட்டவிரோத செயல் என்றும், சோதனை என்ற பெயரில் அடையாளம் தெரியாத ஏராளமான பேர் புகுந்து வழக்கு தொடர்பான முக்கிய ஆவணங்களை திருடி சென்று விட்டனர் என்றும் அமலாக்கத்துறை சார்பில் தமிழக போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ஜிவாலுக்கு பரபரப்பு புகார் மனு அனுப்பப்பட்டது. இந்த புகாரை தமிழக போலீசார் மறுத்தனர்.

இதற்கிடையே அமலாக்கத்துறை அலுவலகத்தில் சோதனை நடத்த சென்றபோது தங்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாக மதுரை அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மதுரை போலீசில் புகார் கொடுத்தனர். அதனடிப்படையில் மதுரை அமலாக்கத்துறை அதிகாரிகள் சிலர் மீது மதுரை போலீசார் தனியாக வழக்குப்பதிவு செய்தனர். இதுபோன்ற பரபரப்புகள் தமிழ்நாட்டில் நடந்து வரும் நிலையில் டெல்லி அமலாக்கத்துறை சார்பில் திடீரென்று அதிரடி நடவடிக்கை ஒன்று எடுக்கப்பட்டுள்ளது.

லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள அங்கித் திவாரி ரூ.40 லட்சம் லஞ்சம் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதில் முறைகேடான பண பரிமாற்றம் நடந்திருக்கலாம் என்று கருதுவதாகவும், அதுதொடர்பாக வழக்கு ஒன்றை டெல்லி அமலாக்கத்துறை அதிகாரிகள் பதிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் கேட்டு பெறுவதற்கு டெல்லி அமலாக்கத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் செய்திகள்