பிறந்தநாள் கேக்கை தாமதமாக கொண்டு வந்ததால் ஆத்திரம்: மனைவி, மகனை கத்தியால் குத்திய நபர்
|பிறந்தநாள் கேக்கை தாமதமாக கொண்டு வந்ததால் ஆத்திரமடைந்த நபர் ஒருவர், தனது மனைவி மற்றும் மகனை கத்தியால் குத்தியுள்ளார்.
மும்பை,
மும்பையில் பிறந்தநாள் கேக் கொண்டு வருவதில் தாமதமானதால் ஆத்திரமடைந்த 45 வயது நபர் ஒருவர், தனது மனைவி மற்றும் மகனை கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சகினாகா பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திர ஷிண்டே (45 வயது). இவர் ஜூன் 1-ந்தேதி தனது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் அவரது மனைவி ரஞ்சனா ஷிண்டே அவருக்கு கேக் வாங்கி வந்துள்ளார். வீட்டு வேலை செய்யும் ரஞ்சனா ஷிண்டே பணியிடத்தில் அதிக வேலை இருந்ததால் மறுநாள் மதியம் 12.15 மணிக்கு கேக் வாங்கி வந்துள்ளார்.
இந்த நிலையில் பிறந்தநாள் கேக்கை கொண்டு வர தாமதமானதால் கோபமடைந்த ராஜேந்திர ஷிண்டே, ரஞ்சனாவுடன் வாக்குவாதத்ததில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவர்களது மகன் தட்டிக் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராஜேந்திர ஷிண்டே சமையலறை கத்தியால் மகனை குத்தியுள்ளார். ரஞ்சனா ஷிண்டே மகனைக் காப்பாற்ற முயன்றபோது, அவரையும் ராஜேந்திர ஷிண்டே கத்தியால் குத்தினார்.
இதில் பலத்த காயமடைந்த அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். ராஜேந்திர ஷிண்டே அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இந்த நிலையில் இது தொடர்பாக ரஞ்சனா அளித்த புகாரின் அடிப்படையில், ராஜேந்திர ஷிண்டே மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 307-ன் (கொலை முயற்சி) கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை பிடிக்க முயற்சி செய்து வருகின்றனர்.