< Back
தேசிய செய்திகள்
திருமண ஆசை நிறைவேறாததால் கடவுள் மேல் கோபம்.. இளைஞர் செய்த அதிர்ச்சி செயல்!
தேசிய செய்திகள்

திருமண ஆசை நிறைவேறாததால் கடவுள் மேல் கோபம்.. இளைஞர் செய்த அதிர்ச்சி செயல்!

தினத்தந்தி
|
5 Sept 2023 6:22 PM IST

திருமண ஆசை நிறைவேறாததால் சிவலிங்கத்தை திருடிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலம் கவுஷம்பி மாவட்டத்தில் உள்ள கும்ஹியவகா என்ற பகுதியில் பைரவ் பாபா சிவன் கோவில் அமைந்துள்ளது. அண்மையில் இந்த கோவிலுக்குச் சென்ற பக்தர்கள் அங்கிருந்த சிவலிங்கம் காணாமல் போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.


இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி அதே பகுதியைச் சேர்ந்த 27 வயது இளைஞரான சோட்டு என்பவரை கைது செய்தனர். திருடப்பட்ட சிவலிங்கம் மூங்கில் தோட்டத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை பறிமுதல் செய்த போலீசார், சோட்டு மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 379-ன் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

இதனிடையே சோட்டுவிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர் தனக்கு திருமணம் நடைபெற வேண்டும் என சிவபெருமானிடம் மனமுருகி வேண்டி, ஒரு மாதம் விரதம் இருந்ததாகவும், ஆனால் தனது ஆசை நிறைவேறாத காரணத்தால் சிவபெருமான் மீது கோபம் கொண்டு சிவலிங்கத்தை திருடியதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்