கொதிக்கும் பாலை 5-வயது சிறுவன் வாயில் ஊற்றிய அங்கன்வாடி ஊழியர்: கேரளாவில் பரபரப்பு
|சூடான பாலை ஆற வைக்காமல் 5-வயது சிறுவனின் வாயில் ஊற்றியதாக கூறப்படுகிறது.
கண்ணூர்,
கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டம் பினராய் அருகே கோனோடு அங்கன்வாடி மையத்தில் ஊழியராக பணிபுரிந்து வருபவர் ஷீபா (வயது 36). இவர் கடந்த 7-ந் தேதி அங்கன்வாடியில் குழந்தைகளுக்கு பால் காய்ச்சி கொடுத்து உள்ளார். அப்போது சூடான பாலை பக்குவமாக ஆற வைக்காமல், கொதிக்கும் பாலை 5-வயது சிறுவனின் வாயில் ஊற்றியதாக கூறப்படுகிறது.
இதனால் சிறுவன் அலறி துடித்தான். அவனுக்கு வாயில் படுகாயம் ஏற்பட்டது. இருப்பினும், சிறுவனை ஆஸ்பத்திரிக்கு கூட அழைத்து செல்ல நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது. இதுகுறித்து சிறுவனின் பெற்றோர் பினராய் போலீசில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதில் அங்கன்வாடி ஊழியர் அஜாக்கிரதையாக செயல்பட்டு சிறுவனுக்கு காயம் ஏற்படுத்தியது தெரியவந்தது. இதுதொடர்பாக சிறுவர் உரிமை கமிஷன் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து உள்ளது. மேலும் சிறுவன் கோழிக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறான். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.