விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற ஆந்திர என்ஜினீயர் கைது
|விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற ஆந்திர என்ஜினீயர் கைது செய்யப்பட்டார்.
பெங்களூரு:
ஆந்திராவை சேர்ந்தவர் வெங்கட் மோகித். கம்யூட்டர் என்ஜினீயரான இவர் அமெரிக்காவில் உள்ள ஐ.டி. நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் அவர் இங்கிலாந்தின் பாரீசில் இருந்து பெங்களூரு நோக்கி வந்த விமானத்தில் பயணித்தார். விமானத்தில் ஏராளமான பயணிகள் இருந்தனர். அந்த விமானம் பெங்களூருவுக்கு வருவதற்கு சுமார் 4 மணி நேரத்திற்கு முன்பு, விமானத்தில் இருந்த வெங்கட் மோகித், திடீரென விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்றார். இதைக்கண்டு சக பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் விமானத்தில் இருந்த ஊழியர்களிடம் இதுகுறித்து கூறினர்.
உடனே அவர்கள் இதுகுறித்து பெங்களூரு விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். இதற்கிடையே அந்த விமானம் பெங்களூருவை வந்து சேர்ந்தது. இதையடுத்து விமானத்தில் இருந்து இறங்கிய வெங்கட் மோகித்தை அதிகாரிகள் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு இருந்தது தெரிந்தது. இதையடுத்து அவரை போலீசார் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவர் மீது விமான நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.