மனைவி, மகள்களை சுட்டுக் கொன்றுவிட்டு தற்கொலை செய்த போலீஸ்காரர்- ஆந்திராவில் அதிர்ச்சி
|ஆந்திராவில் போலீஸ் ஒருவர் தனது மனைவி மற்றும் இரண்டு மகள்களை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடப்பா,
ஆந்திர மாநிலம் கடப்பா நகரில் உள்ள காவல் நிலையத்தில் எழுத்தராக பணியாற்றியவர் வெங்கடேஷ்வர்லு. கடப்பாவில் உள்ள கூட்டுறவு காலனியில் மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் வெங்கடேஷ்வரலு வசித்து வந்தார். நேற்று இரவு பணி முடிந்து வீட்டுக்கு சென்ற வெங்கடேஷ்வர்லு, திடீரென தான் வைத்து இருந்த துப்பாக்கியை எடுத்து மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகளையும் சுட்டுக்கொலை செய்துள்ளார். பின்னர் அதே துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தானும் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் கிடைத்ததும் விரைந்து வந்த போலீசார் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
வெங்கடேஷ்வர்லு வீட்டில் போலீசார் சோதனை நடத்திய போது தற்கொலை கடிதம் ஒன்றும் சிக்கியது. அதில், "தனிப்பட்ட காரணங்களுக்காக தற்கொலை செய்து கொண்டதாகவும் தனது சொத்துக்களையும் வேலையையும் இரண்டாவது மனைவி மற்றும் மகனுக்கு கொடுங்கள்" என்றும் எழுதியிருந்தார்.
இந்த கடிதத்தை கைப்பற்றிய போலீசார் தொடர்ந்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து, உடன் பணி புரிந்த போலீசார் கூறுகையில், "நேற்று இரவு 11 மணி வரை வெங்கடேஷ்வர்லு பணியில் தான் இருந்தார். போலீஸ் அதிகாரிகளின் துப்பாக்கிகள் இவரது பொறுப்பில் இருந்ததால், அவற்றில் ஒன்றை வீட்டிற்கு எடுத்து சென்று இந்த கொலை மற்றும் தற்கொலைக்கு பயன்படுத்தியிருக்கிறார்" என்றனர். மனைவி மற்றும் இரண்டு மகள்களை கொலை செய்து விட்டு போலீஸ் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஆந்திர மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.