< Back
தேசிய செய்திகள்
தெலுங்கு கொடி உயரப்பறக்கிறது - கோல்டன் குளோப் விருது வென்ற ஆர்ஆர்ஆர் படக்குழுவுக்கு ஆந்திர முதல்-மந்திரி பாராட்டு
தேசிய செய்திகள்

'தெலுங்கு கொடி' உயரப்பறக்கிறது - கோல்டன் குளோப் விருது வென்ற ஆர்ஆர்ஆர் படக்குழுவுக்கு ஆந்திர முதல்-மந்திரி பாராட்டு

தினத்தந்தி
|
11 Jan 2023 6:43 PM IST

ஆஸ்கருக்கு அடுத்தப்படியாக திரைத்துறையினர் உயரிய விருதாக கருதுவது கோல்டன் குளோப் விருது ஆகும்.

அமராவதி,

ராஜமவுலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 25-ம் தேதி ஆர்ஆர்ஆர் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியானது.

தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் வெளியான இந்த திரைப்படம் நல்ல விமர்சனங்கள் பெற்றது. மேலும் இந்த படத்தில் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், ஆலியா பட், பிரகாஷ் ராஜ், சமுத்திரகனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வசூலை குவித்தது.

இதனிடையே, ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் 'நாட்டு நாட்டு' பாடல் கோல்டன் குளோப் விருதை வென்றுள்ளது. ஆஸ்கருக்கு அடுத்தப்படியாக திரைத்துறையினர் உயரிய விருதாக கருதும் கோல்டன் குளோப் விருதில் ஒரிஜினல் பாடல் பிரிவில் ஆர்ஆர்ஆர் படத்தின் 'நாட்டு நாட்டு' வென்றுள்ளது.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த கோல்டன் குளோப் விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஆர்ஆர்ஆர் படக்குழுவினர் விருதை பெற்றுக்கொண்டனர். நாட்டு நாட்டு பாடலுக்கு இசையமைத்த எம்.எம். கீரவாணி நிகழ்ச்சி மேடையில் ஏறி கோல்டன் குளோப் விருதை பெற்றுக்கொண்டார்.

கோல்டன் குளோப் விருதை வென்ற ஆர்ஆர்ஆர் படக்குழுவுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பிரதமர் மோடி, சினிமா பிரபலங்கள் உள்பட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், கோல்டன் குளோப் விருது வென்ற ஆர்ஆர்ஆர் படக்குழுவுக்கு ஆந்திரபிரதேச முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதல்-மந்திரி ஜெகன் மோகன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், தெலுங்கு கொடி உயரப்பறக்கிறது. ஒட்டுமொத்த ஆந்திரபிரதேசத்தின் சார்பாக, எம்.எம். கீரவாணி, ராஜமவுலி, ஜூனியர் என்டிஆர், ராம் சரண் மற்றும் ஆர்ஆர்ஆர் படக்குழுவுக்கு நான் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். உங்களை நினைத்து நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம்' என தெரிவித்துள்ளார்.



மேலும் செய்திகள்