< Back
தேசிய செய்திகள்
ஆந்திராவில் பரபரப்பு! வெள்ள பாதிப்புகளை பார்வையிட சென்ற முன்னாள் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு பயணித்த படகு கவிழ்ந்து விபத்து!
தேசிய செய்திகள்

ஆந்திராவில் பரபரப்பு! வெள்ள பாதிப்புகளை பார்வையிட சென்ற முன்னாள் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு பயணித்த படகு கவிழ்ந்து விபத்து!

தினத்தந்தி
|
22 July 2022 12:41 PM IST

ஆந்திர முன்னாள் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு வெள்ள பாதிப்புகளை நேற்று பார்வையிட சென்றார்.

அமராவதி,

ஆந்திரபிரதேசத்தில் கனமழை பெய்து வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மேற்கு கோதாவரி மாவட்டங்களில் இந்த வெள்ளம் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

கோதாவரியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் 600க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த சுமார் ஒரு லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்த வெள்ள பாதிப்பில் சிக்கி குழந்தைகள் உட்பட பலர் உயிரிழந்துள்ளனர். முழுமையான சேத விவரம் இன்னும் சில நாள்களில் தெரியவரும் என மாநில பேரிடர் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், ஆந்திர முன்னாள் முதல்-மந்திரியும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு வெள்ள பாதிப்புகளை நேற்று பார்வையிட சென்றார்.

கோதாவரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் நிலையில் அதனை பொருட்படுத்தாமல், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தெலுங்கு தேசம் கட்சி சார்பில் நிவாரண உதவி வழங்குவதற்காகக் கட்சியின் முக்கிய பிரமுகர்களுடன் படகு மூலம் சந்திரபாபு நாயுடு சென்றார்.

கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள சோம்பல்லி கிராமத்திற்கு சந்திரபாபு நாயுடு படகு மூலம் சென்றபோது, கிராமத்தை நெருங்கிய நிலையில் ராஜோலு மண்டலம் சோம்பள்ளி அருகே படகு வந்து கொண்டிருந்தபோது, ​​எதிர்பாராதவிதமாக படகு தண்ணீரில் கவிழ்ந்தது.

இதனால் படகில் இருந்த தெலுங்கு தேசம் கட்சியின் முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்எல்ஏக்கள் தண்ணீரில் மூழ்கினர். இதில் சந்திரபாபு நாயுடுவும் நிலை தவறி நீரில் விழுந்தார்.

இதனை கவனித்த மீனவர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் உடனடியாக ஆற்றில் குதித்து, அனைவரையும் பத்திரமாக கரைக்கு கொண்டு வந்தனர். இதனால் பெரும் ஆபத்து தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சந்திரபாபு உள்ளிட்ட தெலுங்கு தேசம் கட்சி தலைவர்கள் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றவில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்