< Back
தேசிய செய்திகள்
ஆண்டர்சன்பேட்டை-ரோட்ஜர்ஸ்கேம்ப் சாலை விரிவாக்கப்பணிகள் தாமதம்
தேசிய செய்திகள்

ஆண்டர்சன்பேட்டை-ரோட்ஜர்ஸ்கேம்ப் சாலை விரிவாக்கப்பணிகள் தாமதம்

தினத்தந்தி
|
23 Sept 2023 12:15 AM IST

ஆண்டர்சன்பேட்டையில் இருந்து ரோட்ஜர்ஸ்கேம்ப் வரையிலான சாலையை விரிவாக்கம் செய்யும்படி பொதுமக்கள் எம்.எல்.ஏ. ரூபாகலா சசிதருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

கோலார் தங்கவயல்

வளர்ச்சி திட்டப்பணிகள்

கோலார் தங்கவயல் தொகுதியில் கடந்த சில மாதங்களாக பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் செய்து முடிக்கப்பட்டு வருகிறது. அதில் குறிப்பிடும்படியாக ரூ.10 கோடி செலவில் மினி விதானசவுதா, ரூ.2 கோடியில் தாலுகா அலுவலகம், ரூ.8 கோடியில் அரசு ஆஸ்பத்திரியில் நவீன மருத்துவ வசதிகள் கொண்ட கட்டிடங்கள் ஆகியவை கட்டி முடிக்கப்பட்டது.

இந்த பணிகள் அனைத்தும் சட்டசபை தேர்தலுக்கு முன்பு தொகுதி எம்.எல்.ஏ. ரூபாகலா சசிதர் கொடுத்த வாக்குறுதியின் பேரில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஆனால் பல சாலை விரிவாக்கப்பணிகள் இன்னும் நிறைவு பெறாமல் உள்ளது. தேர்தலுக்கு முன்பு இறுதியாக கோலார் தங்கவயலில் ரூ.16 கோடியில் தேசிய நெடுஞ்சாலை ஒன்று புதுப்பிக்கப்பட்டது. இது தவிர வேறு எந்த சாலைப்பணிகளும் முடிவடையவில்லை என்று கூறப்படுகிறது.

அதில் ஒன்று ராபர்ட்சன்பேட்டை சர்க்கிளில் இருந்து ஆண்டர்சன்பேட்ைட வழியாக ஆந்திர மாநில எல்லையில் உள்ள ரோட்ஜர்ஸ்கேம்ப் வரையிலான சாலை பணிகள். தேர்தலுக்கு முன்பு இந்த சாலை விரிவாக்கப்பணிகள் நடைபெறும் என்று உறுதி அளித்தார்.

சாலை விரிவாக்கப்பணிகள்

ஆனால் தேர்தல் முடிந்து 3 மாதங்கள் ஆகியும் எந்த பணிகளும் தொடங்கவில்லை. இதனால் தினமும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். புழுதியிலும், குண்டு, குழியுமான சாலைகளிலும் பயணிக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

முன்னதாக இந்த சாலை அமைப்பதற்காக ஆண்டர்சன்பேட்டையில் உள்ள ராமசந்திர மூர்த்தி கோவில், மசூதி, குடியிருப்புகள், வணிக வளாகத்தை சேர்ந்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பின்னர் அவர்களுடன் சமாதான பேச்சு வார்த்தை நடத்தி ஆக்கிரமிப்புகளை அவர்களே அகற்றுவதாக கூறியிருந்தனர். அந்த பணிகள் முடிவடைந்து இருந்தாலும், என்ன காரணத்திற்காக சாலை விரிவாக்கப்பணிகள் நடைபெறவில்லை என்ற கேள்வி எழும்பியுள்ளது.

இதனால் அதிருப்தியடைந்துள்ள பொதுமக்கள் சாலை விரிவாக்கப்பணிகளை துரிதமாக முடிக்கவேண்டும் என்று எம்.எல்.ஏ. ரூபாகலா சசிதருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

இல்லையென்றால் சாலையை மறித்து போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்